Pages

வெள்ளி, பிப்ரவரி 16, 2024

தேர்தல் பத்திரங்கள்: உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு என்ன சொன்னது?

 


அ.பாக்கியம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்கிற காரணத்திற்காகவே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஒன்றிய பாஜ அரசின் இறுமாப்பின் மீது உச்ச நீதிமன்றம் இடியை இறக்கி இருக்கிறது. வரிச்சலுகை என்ற பெயரில் லட்சக்கணக்கான கோடி கார்பரேட்டுகளுக்கு வாரிக் கொடுத்து, மக்களை சுரண்டி கார்பரேட்டுகள் சேர்த்த பணத்தை வாங்கி கொழுத்துக் கொண்டிருந்த பாஜவுக்கு தேர்தல் பத்திர நடைமுறை சட்ட விரோதமானது என்ற 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற ஒருமித்த தீர்ப்பு சம்மட்டி அடி கொடுத்துள்ளது.

தேர்தல் பத்திரம்

தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறை. இதை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம். அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் இதன்மூலம் நன்கொடை அளிக்கலாம்.

மோடி தலைமையிலான பாஜ அரசு 2017ல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் 29 ஜனவரி 2018 அன்று சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம்.

தேர்தல் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள் மட்டுமே. அவற்றை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க மட்டுமே பயன்படுத்த முடியும்.

மக்களவை அல்லது சட்டப் பேரவைக்கு கடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும்.

இத்திட்டத்தின் கீழ் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் 10 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். லோக்சபா தேர்தல் நடக்கக்கூடிய ஆண்டில் கூடுதலாக 30 நாட்களுக்கும் இவை வெளியிடப்படலாம்.

தேர்தல் பத்திரங்கள் நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் முறையை முறைப்படுத்தும் என்று ஒன்றிய பாஜ அரசு கூறியது. ஆனால் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பவர் யார் என்பது ரகசியமாக வைக்கப்படுவதாகவும் இது கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் என்ற கருத்து பரவலாக இருந்தது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாக வழங்குவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்ற விமர்சனமும் எழுந்தது.

இந்தத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதல் மனுவை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான Common Cause இணைந்து 2017ல் தாக்கல் செய்தன. இரண்டாவது மனுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2018 இல் தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தேர்தல் பத்திரத்தில் நன்கொடையாளரின் பெயர் மறைக்கப்படுவது அரசியலமைப்பின் 19(1)(a)பிரிவின் கீழ் ஒரு குடிமகனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தன.

மேலும், இந்தியாவில் துணை நிறுவனங்களைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க அனுமதிக்கும் வகையில் FCRA சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச அளவில் லாபி செய்பவர்களுக்கு தங்களது சொந்த நோக்கத்தை இந்திய அரசியலிலும் ஜனநாயகத்திலும் திணிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

நிறுவனங்கள் தாங்கள் எந்த அரசியல் கட்சிக்கு நிதி அளித்திருக்கிறோம் என்பதை தங்களது ஆண்டு லாப நஷ்ட கணக்குகளில் தெரிவிக்க தேவையில்லை என நிறுவனச் சட்டம் 2013-இல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் குறித்தும் இந்த மனுதாரர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசின் தகிடுதத்தம்:

மக்களின் பணத்தை கார்பரேட்டுகளுக்கு கொடுத்து அவர்களிடம் இருந்த நன்கொடை என்ற பெயரில் அதை வாங்கி, அதன் மூலம் கள்ளத்தனமாக தன்  கஜானாவை  நிரப்பிக் கொண்ட பாஜ அரசு, இந்த திட்டத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் எந்த வெட்கமும் இன்றி வக்காலத்து வாங்கியது.

ஒருவர் தனக்கு விருப்பமான கட்சிக்கு பணத்தை கொடுப்பது ஒருவரின் தனி உரிமையின் மையமான அம்சம் ஆகும் என்று வாதிட்டது. குடிமக்களின் அறியும் உரிமையும் ஒருவரின் தனி உரிமைக்கான உரிமையும் சமநிலையில் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கூச்சமின்றி தெரிவித்தது. அதாவது பாஜவிற்கு எந்த கார்ப்பரேட் கம்பெனி  (அல்லது வெளிநாட்டவர் கூட இருக்கலாம்) நிதியை கொடுத்தார் என்பதை தெரிவிக்காமல் இருப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு வாதாடியது.

அதிகபட்சமாக, அரசியல் கட்சிகள் நிதி பெறுவது குறித்து தெரிந்து கொள்ள குடிமக்களுக்கு பொதுவான உரிமை இல்லை என்று ஆணவமாக கூறியது.

மேலும் தகவல் அறியும் உரிமை என்பது குடிமக்களுக்கு கிடைக்கும் பொதுவான உரிமை இல்லை என்பதையும் தன் தரப்பு வாதமாக மோடி அரசு முன்வைத்தது.

அதாவது குடிமக்களுக்கு ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை கிடையாது என்பதை நீதிமன்றத்திலேயே தெரிவித்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட பேர்வழிகள் என்று பாருங்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் வழங்கும் நிதிகள் பற்றி ஆராய்வதற்கு நீதிமன்றத்திற்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை என்று இறுமாப்புடன்  தெரிவித்தது.

தேர்தல் பத்திரங்களை அளிப்பவரின் விவரங்களை வெளியிடாமல் இருப்பது தனிநபரின் உரிமையை பாதுகாப்பதாகும். அனாமதேய அரசியல் நன்கொடைகள் என்பது ரகசிய வாக்கெடுப்பு என்ற கருத்தின் ஒரு பகுதி ஆகும். எனவே இந்த ரகசியத்தை வெளியிட முடியாது என்று வெட்கமற்ற முறையில் தெரிவித்தது.

குடி மக்களின் தனி உரிமையும் பெரு நிறுவனங்களும் தனி உரிமையையும் வேறுபடுத்தி பார்க்க முடியாது என்று தனது கொள்ளைக்கு ஆதரவாக வாதிட்டது. அதாவது குடிமக்கள் தெரிந்து கொள்வதற்கான தனி உரிமை இருப்பது போல் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுத்த கருப்பு பணத்தை பற்றி தெரிவிக்காமல் இருப்பதற்கும் வாங்கிய அரசியல் கட்சி யார் கொடுத்தார்கள் என்று தெரிவிக்காமல் இருப்பதற்கும் உரிமை இருக்கிறது என்று வாதிட்டது.

தருவது அவர்கள் (கார்பரேட்டுகள்) உரிமை; பெறுவது எங்கள் (அரசியல் கட்சிகள்) உரிமை. இதுகுறித்து கேள்வி கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று வாதிட்டு ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்தது ஒன்றிய அரசு.

பொதுமக்கள் எதை வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருக்கக்கூடாது என ஒன்றிய அரசு அழுத்தம் திருத்தமாக வாதிட்டது.

 

பாஜவுக்கு 60 சதவீதம்: கார்ப்பரேட் கொடுத்ததில் 90 சதவீதம் பாஜக.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2016-2022 வரை 28 ஆயிரத்து 30 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.16,437.63 கோடி.     

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக வருவாயை ஈட்டிய கட்சியாக பாஜக உள்ளது. இந்த கட்சி இந்த காலகட்டத்தில் ரூ.10,122 கோடியை ஈட்டியுள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பெற்ற மொத்த தொகையில் இது ஏறக்குறைய 60 சதவீதமாகும். இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்தக் கட்சி இந்த காலகட்டத்தில் ரூ.1,547 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது. இது மொத்த தொகையில் சுமார் 10 சதவீதமாகும். மூன்றாம் இடம் பிடித்துள்ள திரிணமூல் காங்கிரஸ் ரூ.823 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது.

தீர்ப்பு

தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பு: தேர்தல் பத்திர முறை, தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. தேர்தல் பத்திர முறை திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றால் அதனை ரத்து செய்யலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களைத் தவிர வேறு வழிகள் உள்ளன.

அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என்பதை பல தருணங்களில் நீதிமன்றங்கள் சொல்லியுள்ளன. நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. எனவே, தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்தச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்தச் சட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திர முறை தொடர்பான மற்ற சட்டத் திருத்த மசோதாக்களும் ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திரம் சட்டம் மட்டுமின்றி, கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது.

தேர்தல் பத்திர நிதி விவரங்களை வழங்காமல் இருப்பதற்கு உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களை மார்ச் 6க்குள் வழங்க வேண்டும். அதேபோல், நன்கொடை கொடுத்தோர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஏப்ரல் 13ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பத்திர வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கிடைத்துள்ள சம்மட்டி அடி என்பதில் சந்தேகம் இல்லை

அ.பாக்கியம்

 

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...