Pages

வியாழன், பிப்ரவரி 23, 2023

கால்பந்து முதலாளித்துவம்.

 

       உலக மக்களின் கால்பந்தாட்டம் படிப்படியாக பணக்காரர்களால் திருடப்பட்டு, வணிகமயமாக்கப்பட்டு, தற்போது பங்குச்சந்தையின் சூதாட்டமாக சுழலத் தொடங்கியுள்ளது.

       ஐரோப்பிய கால்பந்தாட்ட கழகங்களின் உயர் அடுக்கு(elite clubs) உரிமையாளர்கள் ஐரோப்பிய சூப்பர் லீக் (European super league)  என்ற ஒரு போட்டியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு ஐரோப்பிய லீக் அமைப்புகள், ஐரோப்பிய ஒன்றிய கால்பந்தாட்ட கழகம் (UEAF) அமைப்பும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பை தெரிவிக்கும் இந்த அமைப்புகள் புனிதமான அமைப்புகள் அல்ல. இவையும் கால்பந்தாட்டத்தை வணிக மயமாக்குவதில் தீவிரமாக செயல்பட்டது தான்.
      தற்போது ஐரோப்பிய கால்பந்தாட் டம் கழகங்கள் முதலாளித்த சுரண்ட லின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு வருவது தான் இந்த ஐரோப்பியன் சூப்பர் லீக்(ESL) போட்டியின் அம்சமாகும்.
       இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாவது ஆண்டில் அதாவது 1990 க்கு பிறகு, ஐரோப்பிய கால்பந்தாட்ட துறையில் குணாம்ச  ரீதியில் மாற்றம் ஏற்பட்டது. கால்பந்தாட்டத்தை முதலீடு செய்வதற்கான ஒரு இடமாகவும் சொத்துக்கள் சேர்ப்பதற்கான தளமாகவும் இந்த மாற்றம் உருவானது.

மார்கரெட் தாட்சரின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், பொதுத் துறைகளின் கட்டுப்பாடுகளை நீக்கி  இங்கிலாந்தை தடையற்ற சந்தையை ஏற்றுக்கொள்ளச் செய்தது.





1992 ல் இங்கிலாந்தில் பிரீமியர்ஷிப்பின் லீப் என்ற பெயரில் போட்டி நடத்துவதற்கான ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் இங்கிலாந்தில் உள்ள ஒரு கால்பந்தாட்டத் தொடர் போட்டியாகும். இங்கிலாந்தின் உள்நாட்டு கால்பந்தாட்ட போட்டித் தொடர்களில் இதுவே முதன்மையானது. 20 அணிகள் பங்குபெறும் இத் தொடரில் ஆண்டு தோறும் 380 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிறுவனம் உலக தொலைக்காட்சிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரூபர்ட் முர்டோக்கின் BSkyB ஐ தொலைக்காட்சி ஒளிபரப்புகளை கையாளுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதுவே போட்டி நடத்துவதற்கான நிபந்தனியாகவும் உருவாக்கப்பட்டது.

  ஒருபுறம் இந்த நடவடிக்கை உயர்மட்டத்தில் பெரும் பணப் பாய்ச்சலை உருவாக்கியது. மறுபுறம், வருமானத்தின் அடிப்படையில் பிரீமியர் லீக் மற்றும் கால்பந்து லீக்கிற்கு இடையே ஒரு தீவிர ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியது. அதாவது பிரிமியர் லீக்  பண பலத்துடன் நடத்துவதும் இதர கால்பந்தாட்ட லீக் வசதியற்ற நிலையில் இருப்பதுமாக மாறியது. பல கிளப்புகள் பங்குச் சந்தையில் மிதக்க இந்த   பிரீமியர் லீக் போட்டியை பயன்படுத்திகொண்டன.

கால்பந்தாட்டத்தை வணிகமயமாக்
களின் முதல் அம்சமாக விளையாட்டு அரங்கில் டிகெட்டுகள் விற்பது மட்டும்தான் இருந்தது.

உலகளாவிய வலைதள அமைப்பின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி மாறிய பிறகு தொலைக்காட்சி உரிமைகள் கால்பந்தாட்டத்தின் பிரதான வணிக மையமாக மாறியது. கால்பந்தாட்ட பொருளாதாரம் உருவானது.


அடுத்ததாக தலைசிறந்த வீரர்கள், மேலாளர்கள், பயிற்சியாளர்கள், போன்றவர்களை ஈர்ப்பதுடன், பணக்கார பில்லியனர்களையும் இந்த லீக்கில் முதலீடு செய்ய தூண்டுகிறது.

எனவே விளையாட்டின் வெற்றி அடிப்படையில் பணத்தை கொண்டு தீர்மானிப்பதற்கு வழி வகுத்தது.
மேலும் இது பணக்காரர்கள் பணக்காரர்களாகவும், சிறிய கிளப்புகள் அவர்களுடன் போட்டியிட முடியாத அளவிற்கும் பரவலான சமத்துவமின்மைக்கு அடித்தளம் அமைத்தது

  பிரீமியர் லீகின் இந்த நிலைமை கடந்த  மூன்று தசாப்தங்களாக மாறாமலேயே தொடர்கிறது.பணம் தீர்மானிக்கும் இடத்திற்கு வந்து விட்டதால் கீழ்கண்ட கிளப்புகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன.

    மான்செஸ்டர் யுனைடெட், அர்செனல், செல்சியா,மான்செஸ்டர் சிட்டி (சமீபத்தில் லிவர்பூலும்) போன்ற பணக்கார கிளப்புகளும் விதிவிலக்காக பிளாக்பர்ன் ரோவர்ஸ், (1995) லெய்செஸ்டர் சிட்டி (2016) போன்ற கிளப்புகள் லீக் பட்டங்களை தங்களுக்குள்ளேயே தக்க வைத்துக் கொள்ளக்கூடிய முறையில் செயல்படுகின்றன.   

இதேபோன்று எலைட் லீக் போட்டிகளான செரியா ஏ, லா லிகா மற்றும் பன்டெஸ்லிகா மற்றும் UEFA சாம்பியன்ஸ் லீக் (ஐரோப்பாவின் சிறந்த போட்டி) ஆகியவை இதே போன்ற பணம் படைத்த கிளப்புகள் மட்டுமே வெற்றி பெறக்கூடிய சூழ்நிலையை வெளிப்படுத்துகிறது.

எனவே, கால்பந்தாட்ட  வெற்றி என்பது கிளப்களின் வாங்கும் சக்திக்கு ஒத்ததாகிறது. பணம் படைத்த கிளப்புகள் வெற்றி பெற முடியும் மற்றவர்கள் அருகிலேவர முடியாது என்ற நிலைமையை உருவாக்கி விட்டார்கள்.

இத்தகைய நம்பிக்கைக்குரிய வருவாய் ஈட்டும் தொழில் வளர்ச்சியுடன் பெருநிறுவன முதலீட்டாளர்கள் கிளப்புகளை எடுத்துக் கொள்ளத் தொடங்குகிறார்கள், பங்குகளை வாங்குகிறார்கள் அல்லது எலைட் ஐரோப்பிய லீக்குகளில் பங்குகளைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பதினைந்து ஆண்டுகளுக்குள் அமெரிக்க விளையாட்டு உரிமையாளர்கள் கிளேசர்ஸ் (தம்பா பே புக்கனேயர்ஸ்), ஜில்லட் (மாண்ட்ரீல் கனடியன்ஸ்) & ஹிக்ஸ் (டெக்சாஸ் ரேஞ்சர்ஸ்), ஜே.டபிள்யூ.  ஹென்றி (பாஸ்டன் ரெட் சாக்ஸ்), தாமஸ் டி பெனெடெட்டோ (பாஸ்டன் ரெட் சாக்ஸ்), எரிக் தோஹிர் (டிசி யுனைடெட்) ஆகியோர் முறையே மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், ஏஎஸ் ரோமா மற்றும் இன்டர்நேஷனல் போன்ற புகழ்பெற்ற பாரம்பரிய கிளப்புகளின் உரிமையாளர்களாக, பங்குதாரர்களாக மாறி ஆங்கிலேய மற்றும் இத்தாலிய கால்பந்தாட்ட கிளப்புகளின் உரிமையாளர்களாக உருவெடுத்தனர்.

ஒரு பொருளை எங்கிருந்தும் வாங்கிக் கொள்ளலாம் என்பது போல் சந்தை சரக்காக கால்பந்தாட்டத்தை முதலாளித்துவம் மாற்றிவிட்டது.

மறுபுறம், ரஷ்யாவின் ரோமன் அப்ரமோவிச், எண்ணெய் வளம் கொண்ட அரபு உரிமையாளர் ஷேக் மன்சூர்,  கத்தார் முதலீட்டு ஆணையம்,
செல்சியா, மான்செஸ்டர் சிட்டி, PSG ஆகியவற்றின் வெற்றியின்  வரலாற்றை தீர்மானிக்கிறது. இவற்றின் முதலீடு செய்திருக்கிறார்கள்.

      Fly Emirates (Arsenal) மற்றும் Qatar Foundation (Barcelona) Audi (Bayern Munchen) போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப் மூலமாக விளையாட்டின் வெற்றி, தோல்வியில் முதலீடு செய்கிறார்கள்.

இதுபோன்ற வணிகமய முதலீட்டை மையமாக வைத்துள்ள கால்பந்தாட்ட போட்டிகள் பாரம்பரியமான உழைப்பாளி மக்கள் விளையாடக் கூடிய கால்பந்தாட்ட கலாச்சாரத்தை முறித்து விடுகிறது.


இந்த இந்த முதலீடு சார்ந்த பணமயமாக்கல் மூலமாக கால்பந்தாட்டத்தின் ஸ்டேடியம் டிக்கெட்கள் விற்பது உரிமையாளர்களின் முதல் கவலையாக இப்போது இருப்பதில்லை. அவர்களின் சந்தை தயாரிப்புகளை விற்பது நுகர்வோர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது உலகளாவிய ஈர்ப்பை உருவாக்குவது இவர்களின் பிரதான வேலையாக மாறிவிடுகிறது.



  கால்பந்தாட்ட வீரர்களை ஒரு சந்தை பொருளாக மாற்றுகிறார்கள். அதேநேரத்தில் முதலீட்டாளர்களுக் கான நுகர்வோர் சந்தை தளத்தை உருவாக்குகிறார்கள்.

1990 களில் சராசரி ஐரோப்பிய உயரடுக்கு கால்பந்து வீரர்களுக்கும், சராசரி வீரர்களுக்கும் இடையிலான ஊதிய விகிதம்  வேகமாக மாறத் தொடங்கியது.1990 ல், கால்பந்தாட்டம் உலகளாவிய கவரேஜுக்கு முன்பாக ஊதிய விகிதம் 5:1 ஆக இருந்தது.

உலகளாவிய கவரேஜ் கிடைத்த பிறகு 2010 ல் 48:1 என்ற அளவில் ஊதிய விகிதம் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியது.
       வீரர்கள் தங்கள் பிராண்ட்கள், ஸ்பான்சர்ஷிப் மற்றும் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட உடல் உறுப்புகளுடன் கிட்டத்தட்ட பண்டம் போன்ற உருவங்களாக மாறுகிறார்கள்.

ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா முழுவதிலும் இருந்து கால்பந்தாட்ட வீரர்களை  ஐரோப்பிய கிளப்புகள் இறக்குமதி செய்கிறது. இதற்காக முகவர்கள் அமைப்புகள் செயல்படுகிறது அவர்கள் ஆப்பிரிக்கா தென் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள்.
      மறுபுறம், உலகளாவிய கவரேஜ் மூலமாக ஜெர்சிகள்,பிற தயாரிப்புகளை விற்பதற்கான சந்தைகளை திட்டமிட்டு ஏற்படுத்துகிறார்கள்.   ரசிகர் கிளப்புகளை உருவாக்குவதற்கு நிதி உதவி செய்து உருவாக்கி வியாபாரமாக மாற்றுகிறார்கள்.

ஐரோப்பிய உயரடுக்கு கிளப்புகள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.     
      ஒட்டுமொத்த கால்பந்தாட்ட சந்தைகள் ஐரோப்பிய நிறுவனங்களால் கட்டுப்படுத்தப் படுகின்றன. கால்பந்தாட்ட முதலாளித்துவம் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை கால்பந்தாட்டத்தில் உருவாக்கி உள்ளது.
விளையாட்டை பணம் கட்டுப்படுத்து வதால், பெருமையாகக் கூறும் போட்டித்தன்மை என்று அழைக்கப்படுவது  வெறும் வெற்று வார்த்தைகளாக மாறிவிடுகிறது.

இருப்பினும், சிறிய அணிகளின் வாய்ப்புகள் முற்றிலும் பறிபோய்விடவில்லை. விளையாட்டு மைதானத்தில் கிடைக்கக்கூடிய 90 நிமிடங்களில் பலம் வாய்ந்த அணிகளை சவால் விடுகின்ற செயல்களை சிறிய, வசதியற்ற அணிகள் செய்து கொண்டுதான் இருக்கின்றன.


தற்போது மேலும் கால்பந்தாட்டத்தில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஐரோப்பிய சூப்பர் லீக்(ESL)போட்டி நடத்துவதற்கு முன்மொழிந்து உள்ளது. இந்தப் போட்டியில் 15 உயர் அடுக்கு அணிகள் மட்டுமே பங்கேற்கும். போட்டிகளில் போட்டித் திறன் வாய்ந்த அணிகள் மட்டுமே விளையாட முடியும் என்ற எல்லைகளை உருவாக்குகிறது. பெரிய அணிகள் மட்டுமே ஒருவருக்கொருவர் எதிர்த்துப் போட்டியிட முடியும். முதலீட்டாளர்கள் இதிலிருந்து பெரிய லாபத்தை எடுக்க முடியும் என்ற நோக்கத்திற்காக இப்படிப்பட்ட ஒரு லீக் போட்டியை தேர்வு செய்துள்ளனர்.

மக்களின் கால்பந்தாட்டத்தை, கூட்டுணர்வு அமைதி ஒற்றுமை ஆகியவற்றை வெளிப்படுத்தக்கூடிய உணர்வு மிக்க விளையாட்டை செல்வம் சேர்க்கும் வெறித்தனமான விளையாட்டாக மாற்றுகிறது இந்த கால்பந்தாட்ட முதலாளித்துவம்.

ஏப்ரல் 2021 ல் ஐரோப்பிய சூப்பர் லீக்கின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை ரசிகர்கள் விளையாட்டு வீரர்கள் சில நாடுகள் உலக கால்பந்து  சம்மேளனம், ஐரோப்பிய சம்மேளனம் உட்பட கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். கால்பந்தாட்டத்தை உயரடுக்கு விளையாட்டாக மாற்றும் செயல் என்று தெரிவித்தனர்.








தற்போது உள்ள முழு ஐரோப்பிய லீக் அமைப்பிலும், UEAF உட்பட போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுக்கு சிறிய அணிகள் உட்பட  முறையான வருவாய் பகிர்வின் அடிப்படையில்   ஒரு வகையான வாய்ப்புகள் உள்ளது.ஐரோப்பிய சூப்பர் லீக் (ESL) அந்த வாய்ப்புகளை பறிக்கிறது.  சந்தையில் ஏகபோக உரிமை பெற எலைட் கிளப்புகளின் இந்த முயற்சி தொடர்ந்து மேலோங்கி வருகிறது.

இந்த முதலாளித்துவ போக்குகள் உழைப்பாளி வர்க்க மக்களிடமிருந்து விளையாட்டை பறித்துக் கொள்ள முயற்சி செய்கிறது.
அ.பாக்கியம்.
மேலும் வாசிக்க...


கால்பந்துபோட்டியும் இனவெறியும்.https://bakkiam.blogspot.com/2023/01/blog-post.html
மொராக்கோ முன்னேறுமா? ஆப்பிரிக்க கால்பந்தாட்டம் ஒரு பார்வை.
https://bakkiam.blogspot.com/2022/12/blog-post_42.html
https://www.internationalmagz.com/articles/post-81?utm_source=pocket_mylist


சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...