Pages

செவ்வாய், ஜூன் 28, 2022

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போவாரா?



என்ற  பழமொழிக்கு பழமொழிக்கு பொருத்தமானவர் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர்  திரௌபதி முறுமு.

உள்ளாட்சி கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், மாநில கவர்னர் என உயர் பதவிகளில் பொறுப்பு வகித்த பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் பழங்குடி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என்றாலும், தனது சொந்த கிராமத்திற்கு மின்சாரம் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.


பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் சொந்த கிராமம் ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உப்பெர்டா கிராமத்திற்கு உட்பட்ட டுங்குர் சாஹி  என்ற குக்கிராமம்.


3,500 மக்கள்தொகை கொண்ட உபர்பேடா கிராமத்தில் இரண்டு குக்கிராமங்கள் உள்ளன. படாசாஹி குக்கிராமம் முழுவதுமாக மின்மயமாக்கப்பட்டுள்ளது, 


அதே நேரத்தில்  துங்குர்சாஹியில் 20 வீடுகலுக்கும் இன்னும் மின்சாரம் பெறவில்லை. இங்குள்ளவர்கள் பக்கத்து  கிராமத்தைச் சென்று தங்களது அலைபேசியை ரீசார்ஜ் செய்து எடுத்து வருவார்கள். முர்முவின் மருமகன் பிரஞ்சி நாராயண் துடு தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் டுங்குர்சாஹி குக்கிராமத்தில் வசிக்கிறார். அவரது மனைவி கூறுகையில், “எங்கள் டுங்குர்சாஹி குக்கிராமத்திற்கு மின்சாரம் வழங்குமாறு பலரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், யாரும் பொருட்படுத்தவில்லை,'' என்றார்.


திருவிழாக் காலங்களில் மட்டும் திரௌபதி முருமு கிராமத்திற்கு செல்வார். தனது சொந்த கிராமத்திற்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்படவில்லை. 2019 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் உள்ளூர் எம்எல்ஏ மற்றும் எம்பிக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது, ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று உபர்பேடா கிராமத்தில் வசிக்கும் சித்தரஞ்சன் பாஸ்கே கூறினார். மக்கள் இன்னமும் மண்ணெண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளை ஒளிரச் செய்கிறார்கள், என்றார்.


குக்கிராமத்தில் உள்ள வீடுகள் வன நிலத்தில் கட்டப்பட்டதால் துங்குர்சாஹிக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "கிராம மக்களை இருளில் வைத்திருக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை, ஆனால் சில அதிகாரப்பூர்வ அனுமதிகள் இல்லாததால் இது நடந்தது" என்று அந்த அதிகாரி கூறினார்.

      டாடா பவர் நார்த் ஒடிசா டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (TPNODL) அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 38 மின் கம்பங்கள் மற்றும் 900 மீட்டர் கேபிள்கள், கண்டக்டர்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் ஒரு டிரக் மற்றும் மண் தோண்டும் இயந்திரங்களில் உபர்பேடாவை அடைந்தனர். TPNODL இன் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் கூறுகையில், "மின்மயமாக்கல் பணியை முடிக்கவும், முழு உபர்பேடா கிராமத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்யவும் நிறுவனத்தின் மயூர்பஞ்ச் பிரிவுக்கு நாங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளோம்.


சொந்த கிராமத்திற்கு மின்சாரம் இல்லை என்பதை மூர்மூ கவனத்திற்கு யாரும் கொண்டு செல்லவில்லை என்று சில பத்திரிகைகள் எழுதுவதுதான் கேலிக்கூத்தாக உள்ளது. தனது சொந்த கிராமத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில்தான் நீண்டநாட்கள் வசித்திருக்கிறார்.

இவரின் சொந்த மாவட்டமான மயூர்பஞ்ச் மாவட்டத்தில் 500 கிராமங்களுக்கு முறையான சாலை வசதி கிடையாது 1350 கிராமங்களுக்கு மின் இணைப்பு கிடையாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி 100% கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கி விட்டதாக ஜெர்மனி சென்று சில நாட்களுக்கு முன்பு பேசியுள்ளார்.

இவர்தான் இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி என்றால் ஆர்எஸ்எஸின் ரப்பர் ஸ்டாம்பாக மட்டுமே இருக்க முடியும்.

அ.பாக்கியம் 


https://www.indiatoday.in/india/story/nda-presidential-candidate-droupadi-murmu-odisha-electricity-1966930-2022-06-26




வியாழன், ஜூன் 09, 2022

பூணூலும் அரைஞாண் கயிறும் DYFI கொடி கயிறாக மாறியது. -அ.பாக்கியம்.


(பின்னுட்டத்தினை இணைத்து மேம்படுத்தப்பட்ட பதிவு)

சுதந்திர போராட்ட காலத்திலும், அதன் பிறகும் இந்திய அரசியலில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சுதந்திர போராட்ட காலத்தில் இளைஞர்களாக இருந்து போராடி சிறை சென்றவர்கள்தான் பெரும்பகுதியான இந்திய கம்யூனிச இயக்கத் தலைவர்கள். பகத்சிங் காலத்தில் ஆரம்பித்து, சோஷலிச வாலிபர் முன்னணி யாக (SOCIALIST YOUTH FRONT) தொடர்ந்து 1980-ல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமாக (Democratic Youth Federation of India –DYFI) பரிணாம வளர்ச்சி அடைந்து இந்திய அரசியலில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய போராட்டங் களும், அதனால் சந்தித்த அடக்குமுறைகளும், போராட்டங்களின் விளைவாக கிடைத்த வெற்றிகளும் சொல்லி மாளாது. இந்திய இளைஞர்களு க்கு – தமிழக இளைஞர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்தான் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து கொண்டிருக்கிறது. 

வாலிபர் சங்கத் தோழர்களை போராட்டக் களத்தில் புடம் போட்ட தங்கமாக மாற்றிய ஒரு சமகால வரலாற்றின் சிறுதுளிகள்தான் இந்த வலைப்பூ பதிவு.   

1991ம் ஆண்டு அக்டோபர் மாதம். அப்போதைய  ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. ஏழை, எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்தது. தமிழக மக்கள் தவித்து போனார்கள். மக்களை பாதிக்கும் பிரச்னைகளில் எல்லாம்  உடனடியாக தலையிட்டு போராட்டம் நடத்தும் வாலிபர் சங்கம், பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், வாபஸ் வாங்கக் கோரியும் 1991-ம் ஆண்டு  அக்டோபர்-23ம் தேதி  DYFI நடத்திய மறியல் தமிழகத்தை எழுச்சிக் கொள்ள செய்தது; ஆட்சியாளர்களின் பிடறியைப் பிடித்து உலுக்கியது.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் உடல் நலக்குறைவால் 1987 டிசம்பர் மாதம் மரணமைடைந்தார். முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதற்காக அதிமுகவில் வி.என்.ஜானகி - ஜெயலலிதா இடையே குடுமிப்பிடி சண்டை நடைபெற்றது.

1988 ஜனவரி 6-ம் தேதி வி.என்.ஜானகி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஜனவரி 28-ம் தேதி அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அப்போதைய ஆளுநர் குரானா உத்தரவிட்டார். 97 உறுப்பினர் களின் ஆதரவை மட்டுமே பெற்றிருந்த ஜானகி, யார், யாருடைய ஆதரவையோ பெற முயன்றும் முடியாமல் போனது. ஜனவரி 28­­-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, சட்டமன்றத்தில் வரலாறு காணாத கலவரம் வெடித்தது. வி.என்.ஜானகி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக அப்போதைய சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன் அறிவித்தார். ஆனாலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறி ஜனவரி 30-ல் வி.என்.ஜானகி ஆட்சியை மத்திய அரசு கலைத்தது.  அதன்பிறகு ஓர் ஆண்டு  ஆளுநர் ஆட்சிதான்.1989-ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக ஜா, ஜெ என இரண்டு அணிகளாக போட்டியிட்டு தோல்வி அடைந்தன. அப்போது இரட்டைஇலை சின்னம் முடக்கப்பட்டதால், ஜானகி அணி ‘இரட்டைப்புறா’ சின்னத்திலும், ஜெ அணி சேவல் சின்னத்திலும் போட்டியிட் டன.  அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

அப்போது மத்தியில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சந்திரசேகர் (7 மாதங்கள்) பிரதமராக இருந்தார். அவரை ராஜீவ்காந்திதான் ரிமோட் கன்ட்ரோலில் இயக்கி கொண்டிருந்தார். இந்நிலையில், 1991-ஆண்டு ஜனவரி 30-ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை பிரதமர் சந்திரசேகர் கலைத்தார். 

பின்னர் 1991 ஜூன் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைந்து இரட்டைஇலைச் சின்னத்தில் போட்டியிட்டன. மிருகபல பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது. ஜெயலலிதா முதலமைச்சரானார்.   காங்கிரஸ் கட்சியுடன் கூட் டணி அமைத்து அதிமுக இந்த வெற்றியை பெற்றது.காங்கிரஸ் 60 இடங்களில் வெற்றிபெற்றது. தமிழகத்தில் ராஜீவ்காந்தி படுகொலை நடந்த (மே 21,1991) பின்னணியில் இந்தக் கூட்டணி பெரும் வெற்றிபெற்றது.

திமுக தலைமையில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி திருவாரூரிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைப்பூண்டியிலும் வெற்றி பெற்றன. துறைமுகம்தொகுதியில் கலைஞர் கருணாநிதி, எழும்பூர் தொகுதியில் இளம்வழுதி என திமுகவில் இரண்டு பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். திமுக பெரும் தோல்வியை சந்தித்தது. 

மிருகபல பெரும்பான்மயுடன் ஆட்சியைப் பிடித்ததால், அதிகார மமதையில் மக்கள் விரோத முடிவுகளை ஜெயலலிதா எடுக்க ஆரம்பித்தார். ஆட்சிக்கு வந்த சிலமாதங்களிலேயே பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தினார்.   ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார் கள். காரணம் அன்றைய தினம் பஸ் போக்குவரத்து மட்டும்தான் உழைக்கும் மக்களின் பிரதான போக்குவரத்து சாதனமாக இருந்தது. சட்டமன்ற தேர்தல் தோல்வியால் திமுக உள்ளிட்ட முதலாளித்துவ கட்சிகள் துவண்டு போயிருந்தன. தீவிர போராட்டத்திற்கு தயாராகவில்லை. இடதுசாரிகள் மட்டுமே கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பினர்.

அந்த நேரத்தில்தான் வாலிபர் சங்கம் களத்தில் குதித்தது. பஸ் கட்டண உயர்வை எதிர்த்து அக்டோபர் 23-ம் தேதி தமிழகம் முழுவதும் மறியல் நடைபெறும் என்று அறிவித்தது. பஸ் கட்டண உயர்வை எதிர்த்த முதல்குரல், போராட்ட அறிவிப்பு – வாலிபர்களிடம் இருந்து வரும் என்று ஜெயலலிதா எதிர்பார்க்கவில்லை.  எனவே கோபத்தின் உச்சத்திற்கே சென்றார். வாலிபர் சங்கத்தின் மீது கடுமையான அடக்குமுறையை ஏவி விட ஆயத்தமானார்.

மறியல் போராட்டத்துக்கு அரசு தடை விதித்தது. மறியலில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வாலிபர் அமைப்புக்கு (DYFI) எதிராக மாநிலஅரசு வானொலியிலும், தொலைக் காட்சியிலும், தொடர்ந்து பிரச்சாரம் செய்தது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், வாலிபர்களை பயமுறுத்தும் விதமாக மறியலுக்கு எதிராக பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தார்கள்.  உள்ளூர் அளவிலும் போராட்டத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகளை எடுத்தார்கள்.

    அக்டோபர் 23ம் தேதிக்கு (மறியல் தேதி) இரண்டு நாட்களுக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான வாலிபர் சங்கத் தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டத்தில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்ததால் அங்கு மறியல் போராட்டம் நடத்துவது இல்லை என்று வாலிபர் சங்கம் முடிவு எடுத்து அறிவித்திருந்தது. ஆனாலும் அரசும், காவல்துறையும்  அதை நம்பவில்லை. அந்த மாவட்டத்தில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 450 வாலிபர் சங்க தோழர்களை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தார்கள்.

மறியல் என்று சொன்னாலே கூட்டமாக சேர்ந்த பிற்பாடு, காவல்துறை கைதுசெய்யும் வழக்கம் இன்று இருப்பதுபோல், அப்போது இல்லை.  மறியலுக்கு வரவர உடனடியாக கைது செய்து அழைத்துச் சென்று விடுவார்கள். கூட்டம் சேர விடாமல் தடியடி நடத்துவார்கள்.

சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அண்ணா சாலையில் தொடர்ந்து மறியல் போராட்டத்தை நடத்திக் கொண்டே இருக்கும்.   மறியலுக்கு பஸ்ஸில் வரக் கூடியவர்களை பஸ் நிறுத்தத்தில் நின்று கைது செய்வதும், சைக்கிளில் கொடிகட்டிக் கொண்டு வருபவர்களை மடக்கி கைதுசெய்வதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. 

     காவல்துறையின் இந்தப் போக்கை முறியடிப்பதற்காக வாலிபர் சங்கத் தோழர்கள் அண்ணாசாலையில் அருகருகில் இருக்கக்கூடிய திரையரங்குகளாகிய சாந்தி, அண்ணா, தேவிபாரடைஸ், வெலிங்டன், கேசினோ, கெயிட்டி ஆகிய திரையரங்குகளில் சினிமா பார்ப்பதற்கு (அப்பொழுது காலை காட்சி அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படும்) வரிசையில் நிற்பதுபோல் நின்று விடுவோம்.

              குறித்த நேரத்தில் உரத்த விசில் சத்தம் கொடுத்து காவல்துறையின் கண்களில் மண்ணைத்தூவி சாலைகளில் கூட்டமாக அமர்ந்து மறியல் செய்வது வழக்கம்.

காவல்துறையும் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி கைது செய்வதும் வழக்கமாக நடந்து கொண்டிருந்தது. தடியடி என்பதும் தள்ளுமுள்ளு என்பதும் வாலிபர் சங்கத்தின் ஒவ்வொரு மறியலிலும் தவிர்க்கமுடியாததாக இருக்கும்.

              இதே போன்ற உத்தியைதான் அக்டோபர் 23-ம் தேதியும் கடைபிடித் தோம். ஆனால் காவல்துறை தனது உத்தியை மாற்றி அவர்களும் சீருடை அணியாமல் எல்லா திரையரங்குகளிலும் வரிசையில் நின்று கொண்டிருந்தார் கள். குறிப்பிட்ட நேரத்தில் விசில் சத்தம் கேட்டவுடன் அரங்கிலிருந்து ஓடிவரக் கூடியவர்களை அங்கேயே தடுக்க முயற்சித்தார்கள்.

இதனால் மோதல் பெரிதாக மாறியது. காவல்துறை தடியடியில் 105 தோழர்கள் படுகாயமடைந்தனர். அதில் நிலைமை மோசமாக இருந்த 14 தோழர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.சைதாப்பேட்டை ஜோசப் நடுவிரல்ஒடிந்தும் மீண்டும் மீண்டும் சாலையில் படுத்து மறித்தார். 

இவ்வளவு தாக்குதலையும் மீறி சென்னையில் களம் கண்ட வாலிபர் சங்கத் தோழர்கள் 1500 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டார்கள். சென்னையில் காவல்துறையின் கடுமையான தாக்குதலையும் மீறி மறியல் நடைபெற்றதால் கடுப்பாகிய காவல்துறை, அகில இந்திய மாநாட்டிற்கு செல்லவிருந்த மாநிலச் செயலாளர் ரவீந்திரன், மாதவ், பீம்ராவ் ஆகியோர் உட்பட சில பிரதிநிதிகளை மாநிலக்குழு அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து கைது செய்து சிறையில் அடைத்தது.

              இதேபோன்று மதுரை மாநகரில் கட்டபொம்மன் சிலையை சுற்றி இருக்கக் கூடிய தெருக்களில் இளைஞர்களை நிற்க வைத்துவிட்டு ஒரே நேரத்தில் மறியல் நடத்திய பொழுது காவல்துறை கடுமையான முறையில் நெருக்கடி கொடுத்து கைது செய்தார்கள்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற எழுச்சிமிகு மறியல்கள் நடைபெற்றது. அடுத்த நாள் அனைத்து பத்திரிகைகளிலும் வாலிபர் சங்கத்தின் மறியல் தலைப்புச் செய்தியாக மாறியது. அரசு  எந்த வானொலியில், எந்த தொலைக்காட்சியில் மறியல் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்தார்களோ அதே வானொலியில், தொலைக்காட்சிகளில் மறியல் செய்தியை வாசித்தனர்.

              அரசின் இத்தனை தடைகளையும் மீறி மறியல் நடைபெற்றுவிட்டதே என்று ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஜெயலலிதா கைதான 8,500 இளைஞர்களை சிறையில் அடைப்பதற்கு உத்தரவிட்டார். அகில இந்திய மாநாடும், தீபாவளியும் அடுத்தடுத்து இருந்தாலும் சிறைக் கொட்டடியில் இருப்போம்; ஜாமீன்கூட கோர மாட்டோம் என்று வாலிபர் சங்க தலைமை முடிவெடுத்தது. 15 நாட்கள் பல்லாயிரக்கணக்கான தோழர்கள் சிறையில் இருந்தார்கள். சொல்லவொணா துயருற்றார்கள். ஆனாலும், ஜெயலலிதா அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஒருபோதும் அஞ்சவில்லை.

              கோவை சிறையில் மட்டும் சுற்று வட்டார மாவட்டங்களை எல்லாம் சேர்த்து 3000 இளைஞர்கள் அடைக்கப்பட்டி ருந்தார்கள். மதுரை சிறையில் 1500 பேரும் சென்னை சிறையில் 2800 பேரும் அடைக்கப்பட்டிருந்தார்கள். இவை தவிர வேலூர், கடலூர், சேலம், பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய சிறைகளில் 124  பெண்கள் உட்பட 8500 பேர்கள் 15 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்கள்.

சென்னை சிறையில் இருந்த தோழர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநில செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்த தோழர் நல்லசிவன் அவர்களும் நானும் (பாக்கியம்) சென்று சந்தித்தோம். தோழர் ரவீந்திரன்உட்பட மாநாட்டு பிரதிநிதிகளை பிணையில் எடுத்து அகில இந்திய மாநாட்டிற்கு பிரதிநிதியாக அழைத்துச் சென்றோம்.

              அப்போது (அக்டோபர் 28ம் தேதி) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 4-வது அகில இந்திய மாநாடு மும்பையில் தாதரில் நடைபெற்றது. மாநாட்டு துவக்கநாள் அன்று இந்தியா முழுவதும் உள்ள வாலிபர் சங்க கிளைகள் தங்கள் பகுதியில் வாலிபர் சங்க கொடியை ஏற்றுவது வழக்கம். தமிழகத்தில் பெரும்பாலான வாலிபர் சங்கத் தோழர்கள் சிறையில் இருந்ததனால், தங்கள் பகுதிகளில் அகில இந்திய மாநாடு துவக்க தினத்தன்று வாலிபர் சங்க கொடியேற்ற முடியவில்லை. 

அகில இந்திய மாநாட்டின் துவக்க நாளான்று எப்படியாவது கொடியேற்ற வேண்டும் என்று கோவை சிறையில் இருந்த தோழர்கள் முடிவெடுத்தார்கள். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்கள்.  உள்ளே இருக்கக்கூடியவர்களுடன் பேசி ஒரு கொடிக்கம்பத்தை தயார் செய்து விட்டார்கள். வாலிபர் சங்க கொடியை சிறைக்கு செல்லும் போது எடுத்துச் சென்றதால், கொடிக்கும் பிரச்னை இல்லை.  

ஆனால் கொடியை ஏற்றுவதற்கான கயிறுதான் கிடைக்கவில்லை. அடடா... பாதி கிணறு தாண்டிய கதையாகிவிட்டதே என்ற வருத்தமும், நிகழ்ச்சி நடைபெறாமல் போய்விடுமோ என்ற அச்சமும், ஏக்கமும் ஏற்பட்டது. கொடிக் கயிறுக்கு என்ன செய்வது என்பதைப் பற்றி வாலிபர் சங்கத் தோழர்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். கூட்டத்தில் இருந்த ஒரு தோழர் திடீரென, என்னிடம் பூணூல் இருக்கிறது. அதைக் கழட்டி தருகிறேன் என்று கூறி உடனடியாக கழட்டி கொடுத்தார்.

சிறைச்சாலைக்குள் வேறு எந்த கயிறுக்கும் அனுமதி இல்லை. ஆனால், பூணூலுக்கு மட்டும் அனுமதி உண்டு. பூணூல் கயிறோ கொடிக்கம்பத்திற்கு ஏற்ற உயரத்திற்கு வரவில்லை. என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தபோதுதான் தெரியவந்தது, சிறைக்கு வந்த 3 ஆயிரம் பேரில் பலர் அரைஞாண் கயிறுடன் வந்திருக்கிறார்கள் என்று.  அவர்கள் உடனடியாக தங்கள் அரைஞாண்  கயிற்றை கழட்டி கொடுத்தார்கள். பூணூல், அரைஞாண் கயிறு  இவற்றையெல்லாம் இணைத்து  கொடிகயிராக மாறியபொழுது, 3000 வாலிபர்களின் உற்சாகம் சிறையின் சுவர்களை கடந்து, வெளியே பரவி விண்ணோக்கி சென்றது.

மும்பை மாநகரத்தில் மாநாடு கொடி ஏற்றிய பொழுது, கோயம்புத்தூர் சிறையில் பூணூலும் அரைஞாண் கயிறும் இணைந்த வாலிபர் சங்கத்தின் அந்த வெண்கொடியை பறக்கவிட்டார்கள். எங்களை வேண்டுமானால் சிறையில் அடைக்கலாம்; எங்கள் சிந்தனைகளையும். செயல்களையும் சிறைபடுத்த முடியாது என்று தங்கள் செயல்பாடுகளால் வெளிப்படுத்தியது இளைஞர்கள் கூட்டம். 

              கோவையில் மட்டுமல்ல,  மதுரை சிறையில் ஆசிரியர்கள், கைத்தறி தொழிலாளர்கள் மறியல் செய்து கைதாகி சிறையில் இருந்தனர். அவர்களுக்காக போடப்பட்டிருந்த பேரிகாட் சவுக்கு மரத்தில் ஒரு சவுக்கு மரத்தை தயார் செய்து அதில் சிறையில் கொடுக்கும் போர்வையை கிழித்து கயிறாக மாற்றி சிவப்பு நட்சத்திரம் பொறித்த வெள்ளைக்கொடி விண்ணைநோக்கி உயர்ந்து பட்டொளி வீசிப் பறந்தது. சிறையில் இருந்து விடுதலையானபோது, ஒரு போர்வை குறைந்ததால் கணக்கு இடித்தது. உடனே மற்றொரு போர்வையை இரண்டாக கிழித்து சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து கணக்கு முடிக்கப்பட்டது. ஆயிரம்பேர் விடுதலையின்போது இதுசாத்தியமானது என்பது மட்டுமல்ல... எனது கொடிஉயர - எனது உணர்வை வெளிப்படுத்த சிறைவிதிகள் தடையாக இருக்க முடியாது என்பதை மதுரை சிறையிருந்த இளைஞர்கள் நிரூபித்தனர். சேலத்திலும், மரக்கிளைகளை ஒடித்து அதிலேயே கொடிகளை கட்டி மாநாடு தினத்தன்று கொடியேற்றினார் கள்.

    சென்னை சிறையிலும் 2800 வாலிபர்கள் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவோ படுமோசமாக இருந்தது. ஒருநாள் பொறுத்துகொண்டார்கள். அடுத்த நாள் உணவே முந்தைநாள் உணவைவிட மிகமிக மோசமாக இருந்தது.  வாலிபர் சங்க தோழர்கள் போராட்டத்தை  ஆரம்பித்தார்கள். உணவு தட்டுக்கள் பறக்கும் தட்டுக்களாயின. சிறை நிர்வாகம் பதட்டமடைந்தது. வேறு வழியில்லாமல் நல்ல சீரான  உணவு வழங்கலை உறுதிப்படுத்தியது. தலைவர்களும் முறைப்படுத்தினார்கள்.

மதுரை சிறைச்சாலைக்கு 1500 இளைஞர்களை இரவில் அழைத்து சென்ற பொழுது அடைமழை பெய்தது. அவர்களை சிறையில் உள்ள அறைகளுக்கு சிறை நிர்வாகம் அனுப்பவில்லை.  அடைமழையில் நனைந்து கொண்டே இளைஞர்கள் கோஷம் போட்டார்கள். சிறை நிர்வாகத்தின் செவிட்டு காதுகளுக்கு அந்த சத்தம் கேட்கவில்லை. ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என்று கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட நனைந்து பொறுமை காத்தவர்கள் -  பொறுமை இழந்து சிறைக்குள்ளே இருக்கக்கூடிய ஒரு கலை அரங்கின் கதவை உடைத்து உள்ளே சென்று விட்டார்கள்.

    வாலிபர் சங்கத் தோழர்களுக்கும்  சிறையில் இருந்த காவலர்கள் மற்றும் கான்விக்ட் வார்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தடியடியும் நடத்தினார்கள்.  சிறை அதிகாரி தலையிட்டு அரங்கத்துக்கு உள்ளே தங்குவதற்கு அனுமதி கொடுத்து பிரச்சனையை தீர்த்துவைத் தார்.  அடுத்தநாளோ சிறையில் வழங்கப்படும் மதிய உணவின் தரம் அரசின் ஒதுக்கீடுக்கு மாறாக படுமோசமாக இருந்தது. இதை எதிர்த்து சிறைச்சாலைக்குள் மீண்டும் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. சிறை காவலர்கள் வழக்கம்போல் தடியடி நடத்தினர். ஆனால், போராட்டத்தின் விளைவாக  உணவு ஒழுங்காக வழங்கப்பட்டது.

        உரிமைகளுக்காக ஒவ்வொரு இடத்திலும் போராடுபவன்தான் இளைஞன். எதிர்பார்ப்புகளுக்காக அடிபணிந்து போகக் கூடியவன் அல்ல இளைஞன் என்பதை மதுரை தோழர்கள்  நிரூபித்துக் காட்டினார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட 450 இளைஞர்கள் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் ஜாமீனில் வெளி வரவில்லை. அப்போது தென்னார்க்காடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு நடைபெற்றது. சிறைக்குள்ளே கொடியேற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்தனர் வாலிபர் சங்கத் தோழர்கள்.  

மதுரை சிறையில் பெண்களும் கைதாகி சிறையில் இருந்தனர். பழனி நகரத்தைச் சேர்ந்த தோழர் நாகம்மாள் கைக்குழந்தை அன்னலட்சுமியுடன் 15 நாட்கள் சிறையில் இருந்தார். குழந்தையுடன் போராட்டத்தில் பங்கேற்றதோடு சிறைவாசமும் அனுபவித்த பெருமை தோழர் நாகம்மாளை சாரும்.

அன்று கைக்குழந்தையாக இருந்த அன்னலட்சுமி இன்றையதினம் பழனி நகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் குழு உறுப்பினராக தீவிரமாக செயல்படக்கூடிய ஊழியராக இருக்கிறார்.. சிறைவாசம் எங்களது மன உறுதியை எந்த விதத்திலும் சிதைத்து விட முடியாது என்பதற்கு நாகம்மாள், அன்னலட்சுமி  போன்ற தோழர்கள்  நம் கண்முன் சாட்சியாக இருக்கிறார்கள்.

    திருச்சி சிறையில் 700 பேர் வரை அடைக்கப்பட்டிருந்தார்கள். வாலிபர் சங்கம் மறியல் முடிந்து இருநாட்கள் கழித்து பாட்டாளி மக்கள் கட்சியினரும் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து போராடினார்கள். அவர்களை கைது செய்து திருச்சி சிறைக்கு கொண்டு வந்த பொழுது அங்கு இருக்கக்கூடிய அதிகாரி, வாலிபர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் அவர்களிடம், பாமகவினரையும் உங்களையும் ஒரே இடத்தில் வைத்தால் பிரச்சினை இல்லையா? அவர்களை வேறு இடத்திற்கு அனுப்பி விடுகிறேன் என்று கூறியபோது, ஸ்ரீதர், ஒரே கோரிக்கைக்காக போராடி சிறைப்பட்டிருக் கிறார்கள். அவர்களும் இங்கே வரட்டும் என்று சொல்லி இருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளே வந்த பொழுது அவர்களுக்கு வாசலில் நின்று வாலிபர் சங்கம் வரவேற்பு  கொடுத்தது. 

     அதன்பிறகு வாலிபர்  சங்க தோழர்களை விடுதலை செய்வதற்கு முன்பாகவே பாமகவினரை விடுதலை செய்தனர். விடுதலையாகி வெளியே செல்லும்போது, பாமகவினர், வாசலில் நின்று வாலிபர் சங்க தோழர்கள் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷம் போட்டு விட்டு சென்றார்கள். மக்களுக்காக போராடுபவர்கள் யாராக இருந்தாலும் வாலிபர் சங்கம் அவர்களை வாஞ்சையுடன்தான் அணுகும் என்பதற்கு இச்செயல் ஒரு உதாரணமாகும்.

சிறையிலிருந்த நாகப்பட்டினம் தோழர்களுக்கு வரக்கூடிய கடிதங்கள் அனைத்தும் மாறுபட்டதாக இருக்கும். நாங்கள் வயல்வேலைகளை பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் எந்தக்கவலையும் இல்லாமல் இருங்கள் என்றுதான் தபால் கார்டு வரும. சிறையில் இருந்த மற்றவர்கள் இதைக்கண்டு அதிசயித்துப் போனார்கள். 

     நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அன்பழகன், குடவாசல் தியாகராஜன் ஆகிய தோழர்களின் தாயார்கள் இறந்த செய்தி கிடைத்தது. அப்பொழுதும் அவர்கள் ஜாமீனில் வெளிசெல்லாமல் சிறையில் இருந்தார்கள். ஒரு சில தோழர்களின் திருமணம்கூட தள்ளி வைக்கப்பட்டது.  திருச்சி சிறையில் தையல் கலைஞர் சிறைப்பட்டு விட்டார்.  தீபாவளி நேரத்தில் துணி தைக்க கொடுத்தவர்களுக்கு தைத்துக் கொடுக்க முடியவில்லை. இந்த சிரமங்களையும் விடுதலையான பிறகு அவர், மக்களிடம் எடுத்துச் சொல்லி புரிய வைத்திருக்கிறார்.

சென்னையில் பாரிமுனையில் உள்ள நடைபாதை வியாபாரிகள் கடன்வாங்கி தீபாவளி விற்பனைக்காக பொருட்களை வாங்கி வைத்தனர். சிறையில் இருந்ததால் வியாபாரம் செய்யமுடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. மதுரையில் கைது செய்து அனைத்து வேலைகளையும் முடிக்கும்போது மொத்த எண்ணிக்கைளியயில் இருவரை அதிமான கொடுத்துவிட்டனர். பெயர்கள் குழப்பம் வேறு. கடைசிநேரத்தில் இருவர் கண்டிப்பாக தேவை என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. சிறைக்கு செல்பவர்களை வழிஅனுப்பும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தானம், கல்யானசுந்தரம் முன்வந்து சிறைக்கு தானாகவே வந்தனர். காவலர்கள் ஆச்சிரியப்பட்டனர். இப்படி ஒரு இயக்கமா என்று? இதில் சந்தானம் என்ற வாலிபருக்கு அடுத்த இருநாட்களில் வேலைக்கான நேர்காணல் இருந்தது. அதைமறைத்து சிறைக்குவந்துவிட்டார். அதன்பிறகுதான் தலைவர்களுக்கு தெரிந்தது. இதானால் அவர் அந்த வேலையை பெறமுடியவில்லை. அதைப்பற்றி கவலைப்படாமல் துணிச்சலாக சிறையில் இருந்தார்.

சேலம் சிறைச்சாலையில் 270 பேருக்கு மேல் இருந்தனர். முதலில் ஒவ்வொரு அறைக்கும் எட்டு பேர் என்ற நிலை. இதனால் இடவசதி, கழிப்பிட வசதி இல்லாத நிலை. இதையடுத்து வாலிபர் சங்கத் தோழர்கள் அடுத்தநாள் போராட்டம் நடத்தினர். மூன்று பேருக்கு ஒரு அறை என்று ஒதுக்கப்பட்டது.

 பாளையங்கோட்டை சிறையில் நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வாலிபர் சங்க தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட கே.ஜி. பாஸ்கரன் மறியல் அன்று விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அவரும் மறியலில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

வேலூர் சிறைச்சாலையில் தோழர் சங்கரி மற்றும் இஸ்லாமிய பெண்கள் உட்பட 12 பெண்கள் மாவட்டத்தலைவர் வீரபத்திரன்  என மொத்தம் 260 பேர் இருந்தனர். பெண்கள் தாலிக்கயிறு அணிந்த செல்லக்கூடாது கழற்றிகொடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மஞ்சல் நூல் அணிந்துசெல்ல அனுமதிக்கப்பட்டனர்..

        வேலூர் மாவட்டம் முழுவதும் மறியலில் பங்கேற்று கைதாயினர். ஆனால் ஆற்காடில் கோர்ட்டுக்கு கொண்டு சென்ற காவல்துறையினரிடம் நீதிபதி இவர்கள் என்ன செய்தார்கள் என்று கைது செய்துள்ளீர்கள் என்று கேட்டார். இந்த அரசுக்கு எதிராக சதி செய்து கொண்டு இருந்தார்கள் என வழக்கு பதிவு செய்து உள்ளோம் என்றனர். எந்த இடத்தில் இவர்களை கைது செய்தீர்கள் என கேட்டார் நீதிபதி.

        அண்ணா சிலை அருகில் என்றனர் காவலர்கள். ஏய்யா சதி செய்றவன் அண்ணா சிலை கிட்ட நின்னா சதி பண்ணுவான். உனக்கும் சேர்த்து பஸ்கட்டணம் குறைக்க சொல்லி கோஷம் போட்டா சதின்னு கூட்டிட்டு வந்துருவியா? என கேட்டு முப்பது தோழர்களையும் விடுதலை செய்தார்.

தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைச் சாலைகளும் வாலிபர் சங்க தோழர்களால் நிரம்பி வழிந்தது. சிறைச்சாலைகளில் வகுப்புகள் நடைபெற் றது. பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், நாடகம், விளையாட்டு, என்று சொல்லி பல்வேறுவகையான கலைநிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந் தார்கள். 

              வாலிபர் சங்கத் தோழர்கள் சிறைக்கூடங்களை கலைக்கூடங்களாக மாற்றி விட்டார்கள். வாலிபர் சங்க தோழர்கள் விடுதலையாகி வருகிற பொழுது இதர கைதிகள் கண்ணீர் மல்க வழியனுப்பினர்.

              பிணையில் வர மாட்டோம் என்று வாலிபர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்திருந்தது.  வீராப்பு பிடித்த ஜெயலலிதா அரசுக்கோ விடுதலை செய்யும் எண்ணமில்லை. ஆனால், அரசுக்கு எதிராக பொதுமக்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர்.  வாலிபர் சங்கத்தின் போராட்டம் நியாயமானதுதான். அரசின் நடவடிக்கை சரியில்லை என்று அதிருப்தி தெரிவித்தனர்.  இடதுசாரி கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் வாலிபர் சங்கத் தோழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரலை ஓங்கி ஒலித்த வண்ணம் இருந்தனர்.

    இந்தப் பின்னணியில் தீபாவளி திருநாள் நெருங்கிக்கொண்டிருந்தது. மாநில அரசு வேறுவழியின்றி தீபாவளித் திருநாளுக்கு முதல்நாள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்தது. நடுச்சாமத்தில் தோழர்கள் வீடுபோய் சேர்ந்தனர்.விடுதலைசெய்தது மட்டுமல்ல பஸ் கட்டண உயர்வின் ஒரு பகுதியை குறைத்து அறிவித்தது. சங்கத்தின் எழுச்சிமிகு இந்த போராட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் பஸ் கட்டண உயர்வையும் குறைக்க வைத்தது.

மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் பகுதி இடைக்கமிட்டி நிர்வாகிகள் என அனைவரும் சிறைஏகினர். சென்னை மத்திய சிறையில் தோழர்கள் ரவீந்திரன், அப்போதைய ஒன்றுபட்ட சென்னை மாவட்டத்தின் தலைவர் மாதவ் மற்றும் நிர்வாகிகள் சண்முகம், பீமாராவ். சுரேஷ். புஷ்பராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் துறைமுகம் கருணாகரன், ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் பாலசுப்ரமணி, வாசுதேவன், பன்னீர்செல்வம்,இராசேந்திரன், நக்கீரன், துளசி, அனீபா போன்றவர்கள் இருந்தனர்.

வேலூர் சிறைச்சாலையில் தோழர்கள் வீரபத்திரன், எஸ்.டி.சங்கரி கடலூர் சிறைச்சாலையில் தோழர்கள் எஸ்.தனசேகரன், ஜி.ஆனந்தன், ஏங்கல்ஸ்பாபு, பி.குமார், சங்கரய்யா போன்ற தோழர்களும், சேலம் சிறைச்சாலையில் தோழர்.குழந்தைவேலு, சண்முகராஜா கோவை சிறைச்சாலையில் தோழர்கள் சிவஞானம், ஈரோடு பழனிச்சாமி, சி. பத்மநாபன், இடுவாய் ரத்தினசாமி, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் சேவியர், கே.ஜி பாஸ்கரன், தென்காசி பட்டாபிராமன், மதுரை சிறைச்சாலையில் தோழர்கள் விருதுநக்ர் சேகர், அர்ஜீனன், மதுரை ராதா, சுப்பையா, லெனின், விக்ரமன், மகாலிங்கம், அண்ணாதுரை, பழனி கந்தசாமி, மாவட்ட தலைவர் காசிமாயன், சக்திகணபதி, திருச்சி சிறைச்சாலையில் தோழர்கள் ஸ்ரீதர், மாரிமுத்து, மயிலாடுதுறை சீனிவாசன் போன்ற நிர்வாகிகள் இணைந்து மற்ற மாவட்ட நிர்வாகிகளும் 15 நாட்கள் சிறையில் இருந்தனர்.

    போராட்டத்தின் வீச்சு தமிழகத்தில் வாலிபர் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் மாவட்ட அளவில் மருத்துவமனை போராட்டங்களை தீரமுடன் நடத்துவதற்கும் உந்துசக்தியாக அமைந்தது. தமிழக இளைஞர் வரலாற்றில் இது மறக்கமுடியாத போராட்டம்.

    (இந்த போராட்டம் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த பதிவை முழுமையான பதிவாக மாற்றுவதற்குஉதவி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்)

-அ.பாக்கியம்.

Feedback

சுந்தரராஜன் சென்னை.

Excellent reliving of 1991 DYFI struggle . This will serve as a timely motivation for our sustained struggle against the effects of neoliberal policies ( skyrocketing of praises of all essential commodities especially petroleum products , intensification of Hindutva agenda and in short against corporate hindutva alliance).

Pushparaj

அருமையான பதிவு. சென்னை அண்ணாசாலையிலும் குறளகம் பகுதியிலும் நடைபெற்ற மறியலில் நமது தோழர்களின் காலணிகள் மட்டும் ஒரு லாரி நிறைய ஏற்றி சென்றதாக கூறினர்.

சென்னை குறளகம் பகுதியில் நானும் தோழர் TK.சண்முகமும் கலந்துகொண்டோம். பதிவு முழுமையும் படித்துவிட்டு சற்று உணர்ச்சிவசப்பட்டேன். மகாகவி பாரதியை நினைத்துக்கொண்டேன். வாழ்த்துக்கள் தலைவரே

Kandasamy Kumaravel

தீபாவளிக்கு முதல் நாள் இரவு இரண்டு மணிக்கு நாங்கள் பழனி வந்து சேர்ந்தோம். சிறைச்சாலைக்குள் இரண்டு பேருக்கு ஒருவர் என்று தபால் கார்டு கொடுக்கப்பட்டது. சிறை சென்ற தோழர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. பாராட்டு விழாவின்போது வாலிபர் சங்கத்தின் நகர்குழு செயலாளராக தேர்வு செய்யப்பட்டு தோழர்களுக்கு பாராட்டு சான்றிதழ் என்பது வழங்கப்பட்டுள்ளது. பல தோழர்கள் இன்றைக்கு அதை வீட்டு பத்திரங்களை பாதுகாப்பது போல் பாதுகாத்து வருகிறார்கள் என்பது தான் இதில் குறிப்பிடத்தக்கது. இச்சான்றிதழ்களை தோழர்கள் ரவீந்திரன், பாண்டி வழங்கினார்கள். வரலாற்றை மறந்து கொண்டிருப்பது இயல்பு. அதை ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பது நமது கடமை என்று மார்க்சிய அறிஞர் எரிக்ஸ்ஹோம்பாம் கூறுவார். அதுபோல் இன்றைக்கு வாலிபர் சங்கத்தின் கடந்த கால வரலாற்றை நினைவூட்டுவது புதிய தோழர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். ஒரு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கக்கூடிய பணியை செய்ய வேண்டிய தேவை என்பது உள்ளது. அந்த அடிப்படையில் வாலிபர் சங்கத்தினுடைய போராட்ட வரலாறுகளை எழுதிக் கொண்டிருக்கும் தோழர் பாக்கியம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Kandasamy Kumaravel

மிக அற்புதமான பதிவு பல தோழர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்த நிகழ்வு இந்த மறியல் போராட்டம். இன்றைக்கெல்லாம் நடப்பதுபோல் மறியல் செய்தால், காலையில் பிடித்து மண்டபத்திலே அமர வைத்து மாலையில் விடுவது போல் அல்ல அப்போது.  பழனியில் என்னை அமைப்பிற்குள் கொண்டு சேர்த்த தோழர்கள் மறைந்த சக்தி கணபதி, 25 வது வார்டு தோழர் வேலுச்சாமி ஆகியோர்  மறியலுக்கு அழைத்து சென்றார்கள். அப்பொழுது நான் நகர்க்குழு உறுப்பினராக இருந்தேன். பழனி அரசு மருத்துவமனை முன்பிருந்து ஊர்வலம் கிளம்புவதற்கு முன்பு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் வி கருப்புசாமி அவர்கள், ‘‘காவல்துறை அதிகாரி 15 நாட்கள் ஜெயலில் வைக்க சொல்லி உத்தரவு வந்துள்ளது. யாரையாவது போகச் சொல்வது என்றால் போகச் சொல்லி விடுங்கள்’’ என்று சொல்கிறார் என தெரிவித்தபோது, வாலிபர் சங்கத் தோழர்கள் யாரும் திரும்பிச் செல்லும் நிலையில் இல்லை. சிறை செல்ல தயாராக, உற்சாகத்துடன் அந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். காவல்துறை அதிகாரிகள் மதியம் 2 மணிக்கு வந்து, ‘‘உங்களை சிறையில் அடைக்க சொல்லி உத்தரவு உறுதியாக வந்துள்ளது. நீங்கள், உறவினர்கள் மூலம் உடைகளை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொன்ன பொழுது பல தோழர்கள் உற்சாகமாக தோழர்கள் மூலம் உடைகளை எடுத்துக் கொண்டு வந்தார்கள். நான் எனது வீட்டிற்கு வந்தேன். அப்பாவிடம் 15 நாட்கள் மதுரை சிறைக்கு செல்கிறேன். பஸ் கட்டணம் உயர்வை கண்டித்து நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கைதாகி விட்டேன் என்று சொன்னபொழுது சிறிது நேரம் கோபப்பட்டார். பிறகு, உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள் என்று சொல்லி இருபது ரூபாய் கொடுத்தார். அப்பொழுது அந்தப் பணம் எனக்கு மிகப் பெரியது. என்னுடன் பழனியில் இருந்து பல தோழர்கள் வந்திருந்தார்கள். ஆயக்குடி தோழர்கள் துரைச்சாமி, முரசொலி பழனி நகரில் இருந்து கணேசன் என்ற இளம் வயது தோழர் வந்திருந்தார். அதேபோல் இன்றைக்கு கட்சியின் நகர்குழு உறுப்பினராக இருந்து என்னுடன் செயல்படும் தோழர் அன்னலட்சுமி அவர்களுடைய தாயாருடன் (நாகம்மாள்) வந்திருந்தார். அப்பொழுது அன்னலட்சுமி சுமார் மூன்று மாதம் நான்கு மாத கைக்குழந்தையாக இருந்தார். இரவு 9 மணிக்கு நாங்கள் மதுரை சென்று சேர்ந்தோம். தோழர் மோகன் அவர்கள் எங்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். சிறைச்சாலைக்குள் மழை கடுமையாக பெய்திருந்தது. படுப்பதற்கு கூட இடமில்லை. மழை தண்ணீர் படாத இடத்தில் காலை குறுகி படுத்துக்கொண்டோம். காலையில் எங்களுக்கு சுகாதாரமான கழிப்பறை வேண்டும். மழை நீரை அகற்றி, இடத்தை சுத்தப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய பிறகே, சிறை நிர்வாகம் அதற்கான நடவடிக்கையில் இறங்கியது. சிறைச்சாலைக்குள் தோழர் செல்வராஜ் அவர்கள் எழுதிய நாடகம் மற்றும் பலருடைய உரைகள் புதிய தோழர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. பழனியில் இருந்து வந்திருந்த தோழர் கணேசன் அவர்கள் முதலில் அழுதார். பிறகு இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் பார்த்து உற்சாகமானார்.

KG Baskaran

அருமையான பதிவுஅனைவரும் சேர்ந்து எழுதும் புதிய முயற்சி சிறக்கட்டும்.

Bharathi Vandavasi

நான் தோழர் மு.வீரபத்திரனுடன் பேசினேன். எல்லாம் புதிய தோழர்கள். கிளைகள் புதிது. வந்தவாசி மறியல் களம் முடிவை மாற்றுங்கள். ஜெயலலிதாவின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சி என்பதால், புதியவர்கள் தாக்கு பிடிப்பது சிரமம். ரிமாண்ட் கண்டிப்பாக இருக்கும். செய்யார் களத்தை மாற்றுங்கள் என்று வலியுறுத்தினேன். அவர் வந்தவாசியில் நடத்துவதின் அவசியத்தை உணர்த்தி நடத்த திட்டமிட்டு நடந்தது.

யமுனா சரவணக்குமார், தமிழ்நாடு

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.அப்போது எனக்கு ஏழு வயது. இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பள்ளி முடிந்து ரிக்ஷாவில் தான் வீட்டுக்கு வருவது வழக்கம். ரிக்ஷாவில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி ஓடியபோது வீட்டுக்கு வெளியே பத்து பதினைந்து பேர்... சொந்தக்காரர்கள் வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தார்கள்.

உள்ளே சென்று பார்த்தால் என் அப்பா ஜீவா கால் நீட்டி அமர்ந்து இருந்தார். அப்பா மெலிந்து இருக்கிறார் என்பதை மற்றவர்கள் பேசும் போது தெரிந்து கொண்டேன்.அப்போதுதான் நான் ஜெயில் என்ற ஒன்றையே கேள்விப்படுகிறேன்.

அப்பா இரவில் லேட்டாக வரும் போதெல்லாம் எனக்காக பரோட்டா வாங்கி வருவார். அப்பா சிறையில் இருந்த போதெல்லாம் அம்மாவை பரோட்டா கேட்டு அணத்தியிருக்கின்றேன்.இதே போராட்டத்தில் எனது சித்தப்பா ராமமூர்த்தி அவர்களும் சிறை பட்டார்

இந்துமதி, அம்பலூர்

மறந்து போன செய்திகள் அனைத்தும் இந்த பதிவின் மூலம் மறுபடியும் நினைவுகளில் வந்தது. நல்ல முயற்சி தோழர்.

Selvakumar Srinivasan

மதுரை வடக்கு ஏரியா கமிட்டிக்கு உட்பட்ட புதூர் மண்மலைமேடு கிளையின் சார்பாக சொக்கர், சங்கர், சுப்பிரமணி, செல்வம் என்கிற நான் ஆகிய நால்வரும் 15 நாட்கள் மதுரை சிறையில் இருந்தோம்.

பசுமரத்தாணி போல் இன்றும் எங்கள் நெஞ்சினில் இருக்கிறது வாலிபர் சங்கம் போராட்டம் !!எனது உடன்பிறந்த சகோதரரின் வரவேற்பு நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளாமல் சிறையிலிருந்த அனுபவம் அது. அப்போது எனக்கு வயது 16.பிறகு வாலிபர் சங்கம் சார்பாக சிறை சென்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் கொடுக்கப்பட்டது.இன்றும் அந்த சான்றிதழ் என்னை பெருமை கொள்ள வைக்கிறது. DYFI ஜிந்தாபாத் !!

Karunakaran Pandian

நான் அப்பொழுது வாலிபர் சங்கத்தின் துறைமுகம் பகுதி தலைவராகவும் சென்னை மாவட்டக்குழு உறுப்பினராகவும் இருந்தேன்இப்பகுதியில் உள்ள பெரும்பாலான தோழர்கள் சைனாபஜார், ரட்டன்பஜார் பகுதியில் நடைபாதை வியாபாரிகள். தீபாவளிக்கு சுமார் பத்து நாட்களே உள்ள நிலையில் பலர் வட்டிக்கு கடன் வாங்கி கடை வைத்திருந்த நிலையில் கைதாகி சிறைக்கு வந்து விட்டனர். இதில் பலர் புதிய தோழர்கள்.

நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்படும்போது சிறையில் உணவு நேரம் முடிந்து விட்டது; இரவு பத்து மணிக்கு மேல் தோழர் பீமாராவ் அவர்கள் என்னை எழுப்பி, வெளியில் இருந்து சிறிது உணவு பொட்டலங்கள் வரவழைத்துள்ளோம். நீங்களும் சிறிது சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்றார். நான் உடனடியாக புதிய தோழர்கள் சிலரை எழுப்பி அந்த ஒரு உணவுப் பொட்டலத்தை பங்கிட்டுக் கொடுத்தேன். அன்று சிறை சென்ற பல தோழர்கள் பின்னாளில் வாலிபர் சங்கத்திற்கும்; கட்சிக்கும் சிறந்த பங்களிப்பு செய்தனர்.தோழரின் பதிவு என்னை பழைய நினைவுகளில் ஆழ்த்தியது.

Niruban Ganesan

உணர்வுபூர்வமாக இருந்தது. திரைப்பட காட்சிகளை போல சாகசம் நிறைந்த போராட்டங்கள். அதே நேரம் அரசியல் உறுதிபாடுடனான வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது. இவ்வளவு எண்ணிக்கையில் கைது என்பதே வரலாற்றில் தெரியவேண்டியதாக உள்ளது. தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை தூக்கியெறிந்து ''பூணுலும் அரைஞாணும் DYFI கொடிக்கயிறாக்கியது மிகவும் ஆழமான மாற்றம் வாழ்த்துகள் தோழர்

Chandrasekhar Vuppaladadiam

Very inspiring story. I supported the struggle at vellore. Three decades have passed. More militant struggles is the need of the hour.

Jeeva Maniprakasham

உணர்ச்சிமிகு வரலாற்றில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் நானும் உறுப்பினராக இருப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன் தோழர்...

Balasubramaniam

அன்று நடைபெற்ற மறியலில் இடுவாய் ஊராட்சியில் மட்டும் தியாகி இரத்தினசாமி உட்பட பத்து தோழர்கள் கலந்து கொண்டனர்.

Muthu Pandi

மதுரை சிறையில் இருந்தவர்களில் நானும் ஒருவன். நாங்கள் உடைத்து சென்றது சிறையின் கலை அரங்கம். இரவு முழுவதும் நசநசன்னு மழை பேஞ்சிட்டே இருக்குது. எங்களுக்கான அறை ஒதுக்கீடு செய்யல. ஒதுக்கியது நகர்க்குழுவில் இருந்து பங்கேற்றவர்களுக்கு போதுமான இடமாகவும் இல்லை. எவ்வளவு நேரம் மழையில் நனைவது. வேறு வழியில்லாமல் உடைத்து சென்றோம். மறுநாள் வந்து அதிகாரிகள் வேறு இடம் தருவதாக கூறினார்கள். அதை நாம் மறுத்து நகர்ப்புற தோழர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்போம் என்று வலியுறுத்தியதை ஏற்பது தவிர அதிகாரிகளுக்கு வேறு வழியில்லாமல் போய் விட்டது.

அடுத்த நாள் காலை தடியடி என்பது உணவு பிரச்சினையில் நடந்தது. புறநகரைச் சேர்ந்த கிராமங்களில் இருந்து சிறைக்கு வந்த தோழர்கள், காலை உணவை சீக்கிரமே சாப்பிட்டு வேலைக்கு சென்று பழகியவர்கள். அவர்களுக்கு உணவு தாமதமாக வழங்கினர். அதேசமயம் நகர் தோழர்களுக்கு முதலில் வந்தது. பசி தாங்காமல் சில தோழர்கள் உணவு கொண்டு வருபவர்களிடம் எங்களுக்கு விரைவில் தர வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே சிறை அதிகாரி தண்டனை கைதிகளை வைத்து அடிக்க கூற - அவர்களும் அடிக்க - பிரச்சினை பெரிதாகியது. சிறையில் இருந்த அனைத்து தோழர்களும் அந்த அதிகாரி உட்பட அனைவருக்கும் அவர்கள் மொழியில் பதில் தரப்பட்டு உண்ணாவிரதம் அறிவித்தோம். இதையறிந்த ஜெயிலர் கலையரங்கிற்கு வந்து நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்து இனி அந்த அதிகாரி நீங்கள் சிறையை விட்டு போகும் வரை வரமாட்டார் என உறுதி அளித்தார். அதன் பின், புறநகர் தோழர்களுக்கு முதலிலும் நகர்ப்புற தோழர்களுக்கு அதன் பிறகும் உணவு வழங்க முடிவானது. அத்துடன் நமது போராட்டம் திரும்ப பெற்று கொள்ளப்பட்டது தோழர். இன்னும் எழுத நிறைய தகவல்கள் உண்டு வேலைக்கு செல்ல வேண்டிஇருப்பதால் மாலை எழுதுகிறேன் தோழர்.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே தோழரே..

Durai Duraipandi

மதுரை சிறையில் நானும் எங்கள் கிளை தோழர்களும் அப்பொழுது Dyfi மாவட்ட குழு உறுப்பினர் மதுரை துரைப்பாண்டி

Srinivasan Jj

விருதுநகரில் 75 இளைஞர்கள் தோழர் .சேகர் தலைமையில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதாகாமல் தப்பிப்பது, சிறை செல்லும் தோழர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவுவது என்ற முடிவின்படி நானும் தோழர் K. சுப்புக்காளையும் பணியாற்றிய நினைவுகள் மிகவும் பசுமையானவைகள் -எழுச்சிமிகு இயக்க நினைவுகளைநிழலாடச் செய்கிறது உங்கள் பதிவு -நன்றி தோழர்.

Dinesh Kumar S

அருமையான பதிவு தோழர்.கோவில்பட்டியில் இருந்து அப்போதைய DYFI நிர்வாகிகள்30 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் இருந்துள்ளனர்.

Madhav Katta

நான் அப்போது ஒரே மாவட்டமாக இருந்த சென்னை மாவட்ட தலைவர் மத்திய சிறையில் இருந்தேன். கட்சி கட்டுப்பாடு அடிப்படையிலான மறதிக்கு நன்றி..

Bakkiam

Madhav Katta தோழரே வணக்கம் நீங்கள் என்னுடன் பம்பாய் மாநாட்டிற்கு வந்துவிட்டதாக எனது நினைவு. வரலாற்றில் நடந்த சம்பவங்களை எந்த காரணத்தைக் கொண்டும் மாற்றுவது பொருத்தமற்றது. அப்படிப்பட்ட எண்ணம் எனக்கு இல்லை. பதிவில் கண்டிப்பாக இணைத்துக் கொள்வேன்.

Madhav Katta

Bakkiam தோழர் வாலிபர் சங்கம் வரலாற்று பதிவு முயற்சிக்கு பாராட்டுக்கள்...பதிவில் நேர்மையின் அவசியத்தை கோடிட்டமைக்கு மகிழ்ச்சி...

Madhav Katta

Bakkiam தோழர் அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் பீம் ராவ் ரவீந்திரன் நான் உள்ளிட்ட தோழர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு மாநாட்டில் கலந்துகொண்டோம்.

Arjunan Cpm

நானும் கைதாகி மதுரை சிறையில் 15 நாள் இருந்தேன்.இங்கும் கொடியேற்றப்பட்டது. கலந்துகொண்டோம

Ramaiyan Kalitheerthan

கடந்தகால,போராட்ட அனுபவம், தோழர்களின் உற்சாகம், மீண்டும் நினைவூட்டலுக்கு நன்றி. சென்னை குறளகத்தில் கலந்துகொண்டேன்.

Suresh Kumar

தமிழகம் முழுவதும் DYFI கிளை மாநாடுகள், பகுதி மாநாடுகள் நடைபெற இருக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க போராட்ட நிகழ்வுகளை தோழர்களிடம் கொண்டு செல்வது மிக முக்கியமானதும் பொருத்தமானதுமாகும் நன்றி பாக்கியம் தோழர்!

Suresh Kumar

ரொம்ப முக்கியமான பதிவு Dyfi அனைத்து கிளையில் வாசிக்கப்படவேண்டிc வரளாறு.

Palani Mk

இந்தப் போராட்ட அனுபவத்தை ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்ட செயற்குழு உறுப்பினராக சிறையில் இருக்கும்போது தேர்வு செய்யப்பட்ட தோழர் ஜி.ஆனந்தன் அவர்கள் சிறை அனுபவத்தையும் போராட்டம் குறித்தும் ஏராளமான செய்திகளை பகிர்ந்திருக்கிறார். ஆனால் தோழர் Bakkiam அவர்கள் தமிழகம் முழுவதும் செய்தியாக நிகழ்வை ஒருங்கிணைத்து எழுதியதற்கு முதலில் எனது நன்றிகள். புதிய தகவல்கள் புத்துணர்ச்சியூட்டும் செய்திகளாக வாலிபர் இயக்கத்தில் செயல்படுவதற்கு ஊக்க மருந்தாக இருக்கும். நன்றி தோழர் பாக்கியம்.

Palanisamy S K Skp

நானும் அந்த மறியல் போரில் திருப்பூரில் கலந்துகொண்டு கோவையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். நீங்கள் குறிப்பிட்டதுபோல சிறைச்சாலையில் தினமும் பட்டிமன்றம் கலை நிகழ்ச்சிகள் பேச்சுப்போட்டி போன்ற நிகழ்வுகள் தினசரி நடந்து கொண்டிருக்கும். சிறைச்சாலையில் எங்களை பார்ப்பதற்கு நம்முடைய தோழர்கள் உறவினர்கள் என தினசரி ஏராளமானோர்  வருவார்கள். தின்பண்டங்கள் பல வகைகள் தருவார்கள். இப்படி எண்ணற்ற பொருள்கள் எங்கள் தேவைக்கு மேலேயே தோழர்களும் உறவினர்களும் எங்களுக்கு வழங்கி வந்தார்கள். மறக்க முடியாத ஒரு அனுபவம் நினைவுகூர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழர்

Balamurugan AB Positive

உங்களது இந்த பதிவை படித்தால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என இதுகாலம் வரை உச்சரிக்காத ஒரு வாலிபர் இந்த பதிவை படித்தால் அந்த கணமே DYFI யின் அங்கமாகி விடுவார் தோழர்.

போராட்டம் நடத்துவது

தியேட்டர் வாசலில் நிற்கும் உத்தி

டெய்லர் தோழர் வாடிக்கையாளர்களிடம் காரணத்தை கூறியது

பழநி நாகம்மாள் தோழர்

தபால் கார்டு அடடடடா

.❤❤❤❤

Singaravelan

நானும் சிறைசென்றேன் தோழர். மதுரை சிறையில் உணவுசரியில்லை என்று சிறு சலசலப்பு ஏற்ப்பட்டது. தடியடிவரை சென்றது. பிறகு ஜெயில் சூப்பிரென்டுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சரியான உணவு வழங்கப்பட்டது. சிறையில் அரசியல் வகுப்பு, பாட்டு, நாடகம் போன்றவை மிக நன்றாக நடந்தது. 14 நாட்கள் சிறைவாசம் தீபாவளி முதல் நாள் விடுதலையாகி வீடுவந்தோம்.

Nags Rajan

எங்கள் பகுதியில் பத்மாவதிபுரம் பகுதியில் 12 தோழர்கள் நானும் 11 நாள் கோவை சிறைச்சாலையில் நிறைய அனுபவங்களை கற்றுக் கொண்டோம். இரவில் மூட்டைப்பூச்சி மற்றும் கொசுக்கடிக்கு தான் கொஞ்சம் பயந்தோம்.

Arulraj Ilangovan

Dyfi போராட்டங்களில் பல தோழர்களுக்கு முதன்முறையாக சிறை அனுபவத்தை கொடுத்த போராட்டம். மதுரை சிறைக்குள் உணவுக்காக சிறை வசதிக்காக நிறைய தகராறுகள் நடைபெற்றதை தோழர்கள் சொல்லியிருக்கிறார்கள். பல தோழர்கள் போல நானும் அகில இந்திய மாநாட்டிற்காக பம்பாய் வந்து விட்டேன். மதுரை சமயநல்லூர் தோழர் செல்லமுருகன் திருமணமான புதிதில் கைதாகி சிறை சென்றார். அவர் ஒத்தக்கடை காளிதாசின் (Dyfi கிழக்கு தாலுகா செயலாளர்) (இப்போதைய சிபிஐ மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்) தங்கையை திருமணம் செய்தவர். மைத்துனர்கள் சிறையில் ஒன்றாக இருந்தனர். தோழர் நன்மாறன் இந்த நிகழ்வை சிறப்பாக அவர் பாணியில் கூட்டங்களில் பேசுவார்.

Lenin Era

மதுரை சிறையில் ஆசிரியர்கள், கைத்தறி தொழிலாளர்கள் மறியல் செய்து கைதாகி இருந்தனர். அவர்களுக்காக போடப்பட்டிருந்த பேரிகாட் சவுக்கு மரத்தில் ஒரு சவுக்கு மரத்தை தயார் செய்து அதில் சிறையில் கொடுக்கும் போர்வையை கிழித்து கயிறாக மாற்றி கொடியேற்றப்பட்டது. விடுதலையானபோது ஒரு போர்வை குறைந்ததால் மற்றொரு போர்வையை இரண்டாக கிழித்து சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து கணக்கு முடிக்கப்பட்டது.

Jeyakumar Rvs

அந்த வேகம் இப்போது காணப்படவில்லையே என்ற ஆதங்கம் தான் தோன்றுகிறது.

தாரைப்பிதா

மும்பை அகில இந்திய மாநாட்டு பிரதிநிதியாக போகவேண்டும் என்பதற்காக என்னால் இந்த சிறைவாசம் பூணமுடியாமல் போயிற்று. அன்று நழுவிய சிறைவாசம் அடுத்து கிடைக்காமலே இருந்தது. அதன்பின் சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை எதிர்ப்பு போராட்டத்தில் சேலம் சிறைவாசம் கிடைத்தது.

அகில இந்திய மாநாட்டில் இருந்த போது என் உடன்பிறந்த தம்பி இறந்துவிட்டான். எனக்கு தகவலே எட்டவில்லை. மும்பையில் இருந்து வந்து சேலம் சிறை சென்று தோழர்களை பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்றால், வீடு முழுதும் சோகம். மும்பை செல்லாமல் இருந்திருந்தாலும் ஜெயிலில்தான் இருந்திருப்பேன்.

ஆம், போராடும் ஏழைக்கு சாதியேது? இனமேது? மதமேது? அப்படித்தான் அன்று பிஎம்கே ஜெயிலுக்குள் வந்தபோது நம் தோழர்கள் வரவேற்றும், வழியனுப்பியும் பதிலுக்கு அவர்களும் நம்மை வெளிவிடவும் குரல் கொடுத்தனர். தீபாவளி எல்லாம் ஜெயிலில்தான். அது வெறும் 5 பைசா கட்டணம் உயர்வு.

ஆனால்... இன்று அனுதினமும் விலை உயர்வு என்றாகிவிட்டது. எங்கே சென்றது அந்த போராவேசம். எல்லாம் தமிழ்சமூகத்திற்கு மட்டுமல்ல, இந்திய சமூகத்திற்கும்தான்?

அருமைமிகு பதிவு தோழர். வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

தரன் தரன்

பல உருக்கு போன்ற கம்யூனிஸ்ட்களை உருவாக்கிய போராட்டம் (சிறைச்சாலை)

Surya Prakash

தோழரே நானும் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் இருந்தேன். கும்மிடிப்பூண்டியில் இருந்து நாற்பத்தி நான்கு தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது எனக்கு வயது 18. நான் தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்த சமயம். டைபி இன் ஈர்ப்பால் உற்சாகத்துடன் கலந்து கொண்டோம். நல்ல நல்ல அனுபவம் கிடைத்தது. சிறை சென்று விட்டோமே வேற என்ன உள்ளது என மன தைரியம் ஏற்பட்டுவிட்டது. தற்போது பாக்கியம் தோழர் அவர்களின் இந்தப் பதிவு மீண்டும் மனவலிமையை ஏற்படுத்தியுள்ளது. நன்றி தோழரே

இளங்கோவன் கார்மேகம்

Muthu Pandi சிறையில் ஒளிரும் நட்சத்திரம் நூலில் மதுரை நம்பி இந்நிகழ்வை எழுதியுள்ளார்

Durai Duraipandi

மதுரை சிறையில் நானும் எங்கள்கிளை தோழர்களும்அப்பொழுது Dyfi மாவட்ட குழு உறுப்பினர் மதுரை துரைப்பாண்டி

B R Murali

நீண்ட வரலாறு பாதை வீண்போகாது. புதிய வரலாறுகளை நமது அமைப்பு உருவாக்கும்

Sukumar Srinivasan S

அடியேனும் அந்த மறியலில் கலந்துகொண்டேன்! இந்த மறியலுக்கு முன்புவரை மறியலென்றால் காலையில் கைது செய்வார்கள்... எங்காவது சத்திரத்திலோ காவல் நிலையத்திலோ வைத்திருந்து மாலையில் விடுவித்துவிடுவார்கள் என்ற புரிதலிலிருந்த எனக்கு கொஞ்சம் கலக்கமாகவேயிருந்தது. மனைவியையும் குழந்தைகளை யும் விட்டு தனியாக இருக்கவேண்டுமே... என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்!

லாக்கப்பில் அவர்கள் கொடுத்த அழுக்குகாடாதுணியும் சொட்டைகள் நிறைந்த அலுமினியதட்டும் ஒரு மக்கும் பயன் படுத்துவதற்கே லாயக்கற்றதாக இருந்தது! மறுநாள் காலைக்கடன்களை கழிக்கச் சென்றால்... கழிவுகள் நிறைந்து மேலே நின்றிருந்தது!

கழுவுவதற்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் அசுத்தமாக பீப்பாயில் வைக்கப்பட்டிருந்தது!

இதையெல்லாம் பார்த்த நான் கழிவறைக்குப் போகாமல் தயங்கி நின்றிருந்தபோது என்ன தயங்குறீங்க...? விடுதலைப் போராட்டக்காலங்களில் நம்ம தலைவர்கள் இதைவிடக் கொடுமைகளை அனுபவிச்சாங்களே அதை நினைச்சா இது ஒன்னுமில்லைன்னு மூத்த தோழர்கள் அன்று சொன்னது இன்றும் நினைவிருக்கிறது!

P Selvarajan

தோழர். . பாக்கியம் மு. மாநிலதலைவர் அருமையான நினை வூட்டல் வாழ்த்துக்கள் தோழர்

Rani Aidwa Dindigul

இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் இன்றைய தலைமுறை யினருக்கு மிகவும் முக்கியமானது. நன்றி தோழர்

Yaga Varathan

மறியலில் நான் கலந்து கொண்டேன். அந்த நேரம் எனக்கு தலை தீபாவளி. அப்போதுதான் சிறை சென்றேன்

m.bharathi

நானும் என்னுடன் ஐடிஐ படிக்கும் நண்பர் சங்கர லிங்கம் கலந்து கொண்டோம். இதில் சங்கரலிங்கத்தை மாலை அனுப்பி விடுவார்கள் என்று அழைத்து வந்து விட்டேன். அரசியலுக்கு அப்பாற்பட்ட அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து சரிசெய்ய பெரும்பாடாகி விட்டது. விடுதலையின் போது போர்வையும், தட்டு, கப்பை தொலைத்ததிற்க்கு உதவி ஜெயிலர் தமிழ் செல்வனிடம் அடிவாங்கியதும் மறக்க முடியாத நினைவுகள்.. டிஒய்எப்ஐ சர்டிபிகேட் தான் பத்திரமாக உள்ளது.


தயாநிதி

இன்று தான் வாட்சப் வழியே படித்தேன். மிகச்சிறந்த பதிவு.

மாவட்டம் முழுவதும் மறியலில் பங்கேற்று கைதாயினர். ஆனால் ஆற்காடில் கோர்ட்டுக்கு கொண்டு சென்ற காவல்துறையினரிடம் நீதிபதி இவர்கள் என்ன செய்தார்கள் என்று கைது செய்துள்ளீர்கள் என்று கேட்டார். இந்த அரசுக்கு எதிராக சதி செய்து கொண்டு இருந்தார்கள் என வழக்கு பதிவு செய்து உள்ளோம் என்றனர். 

எந்த இடத்தில் இவர்களை கைது செய்தீர்கள் என கேட்டார் நீதிபதி.
அண்ணா சிலை அருகில் என்றனர் காவலர்கள்.

ஏய்யா சதி செய்றவன் அண்ணா சிலை கிட்ட நின்னா சதி பண்ணுவான். உனக்கும் சேர்த்து பஸ்கட்டணம் குறைக்க சொல்லி கோஷம் போட்டா சதின்னு கூட்டிட்டு வந்துருவியா? என கேட்டு முப்பது தோழர்களையும் விடுதலை செய்தார். தமிழகத்தில் மறியல் போராட்டத்தில் விடுதலை செய்யப் பட்டவர்கள் ஆற்காடு தோழர்கள் மட்டுமே என நினைக்கிறேன்.

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...