Pages

வியாழன், பிப்ரவரி 21, 2019

ஒரு ஏரியும்... நூறு ஓநாய்களும்...



        
          இது சிறுகதையின் தலைப்பல்ல. சிதைபடும் வாழ்வில் சிக்கியுள்ள மக்களின் பதைபதைப்பு. இரவின் நிசப்தத்தை குலைத்து சிற்றுந்துகளும், இருசக்கரவாகனமும் செல்லக்கூடிய தெருக்களை டிப்பர் லாரிகளும், டிராக்டர்களும், வெடிப்பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. நடந்து செல்பவர்களும், பள்ளிக்குழந்தைகளும் பயமின்றி பயணித்த தெருக்கள் மறைந்து, உயிருக்கு பயந்து செல்லும் மரணப்பாதைகளாக தெருக்கள் மாற்றப்பட்டுள்ளன. அச்சமூட்டும் வாகனங்கள், அந்த ஊரின் பரந்த, பசுமையான ஏரியை சூறையாடத்தான் செல்கிறது. சுமார் 247 ஏக்கர் பரப்பளவு உள்ள வாழ்வாதார ஏரியை இன்று, டிப்பர் லாரி, ராட்சச கிணறு வெட்டும் இயந்திரம், ஆழந்தோண்டும் மண் அல்லும் இயந்திரம், வெடிப்பொருட்கள் என அனைத்தும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. நீர் வாழ்வன, இரு வாழ்விகள் வெளியேறி பரந்த ஏரியை ஓநாய்களின் வேட்டைக்காடுகள் போல் குற்றுயுறும், கொலையுயிறுமாய் மாற்றி வருகின்றனர்.

      தமிழகத்தின் பல பகுதிகளில் நடக்கக் கூடியது என்றாலும், காஞ்சி மாவட்டம் தாம்பரம் தாலுக்கா மாடம்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு இது புதுவித தாக்குதலாகவே இருக்கிறது. வேலியே பயிரை மேயும் விதமாக, மாடம்பாக்கம் பேரூராட்சி நிர்வாகமே, இன்று மரணப்பாக்கத்தை படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த செயலை எதிர்த்து, இங்கே குடியிருக்கும் நூற்றுக்கணக்கான முன்னால் இராணுவ, கப்பற்படை மற்றும் மத்திய மாநில அரசு அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் கேள்வி எழுப்பினால் அரசு இயந்திரத்தை கொண்டு அடக்கி வருகிறது. தாங்கள் பங்குகொண்டிருந்த அரசு ஒரு கொள்ளைகாரர்களுக்காக செயல்படுவதையும், இன்னும் சரியாகச் சொன்னால் அரசு பெருந்தனக்காரர்களின் அடக்குமுறை கருவி என்பதை கண்டுகொண்டனர். இருந்தும், வாழ்க்கை போராட்டத்தை தொடர்வதை தவிர வாழவழியில்லை என்ற சூழல் இவர்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.

பறிபோகும் பற்றாக்குறை வாழ்வு :

      மாடம்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கம், பதுவஞ்சேரி, நூத்தஞ்சேரி போன்ற 79 கிராமங்கள் அல்லது நகர்கள் உள்ளன. இம்மக்களின் விவசாயம், நஞ்சை, புஞ்சை, கால்நடை பராமரிப்பு, குடிநீர் உட்பட அனைத்து தேவைகளையும் இங்குள்ள 247 ஏக்கர் பரப்புள்ள ஏரி பூர்த்தி செய்து வந்தது. இப்பகுதியில் பராந்தக சோழன் கட்டிய 1100 ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் மாடம்பாக்கம் ஏரியும் ஒன்று. 640 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி தற்போது 247 ஏக்கராக சுருங்கியது. இந்த ஏரியின் மிகப்பெரும் சாதகம் இப்பகுதியில் சுமார் 600 ஏக்கரில் நஞ்சை விவசாயம் நடைபெறுவதாகும். 756 ஏக்கர் வரை புஞ்சை நிலங்கள் உள்ளன. இதிலும் இடைவெளி விட்டு இந்த ஏரியின் உதவியால் விவசாயம் நடைபெறுகிறது.

    மாடம்பாக்கம் ஏரிக்கு உள்ள வரத்துக்கால்வாய்கள் அனைத்தும் நகர்மயத்தால் அடைபட்டுவிட்டது. மழைக்காலங்களில் மட்டும் நீர்பெறும் ஏரியாக மாறிவிட்டது. கோடையில் விளையாட்டு இடமாக பெரும்பகுதி காட்சி அளிக்கும். 40 அடி ஆழத்தில் கிடைத்த நிலத்தடி நீர் தற்போது 200 முதல் 250 அடி ஆழத்தில் கிடைக்கிறது. விவசாயத்திற்கும் பெரும்பகுதி இந்த ஏரியினால் கிடைக்கும் நிலத்தடி நீரை பயன்படுத்துகின்றனர். மாடம்பாக்கத்தில் 75 சதமான மக்கள் ஆழ்த்துழாய் கிணறுகளை (Borewell) பயன்படுத்துகின்றனர். பேரூராட்சி 25 சதம் வீடுகளுக்குத்தான் குழாய் இணைப்பு கொடுத்துள்ளது. பற்றாக்குறையுடன்தான் விவசாயம், குடிநீர், இதர தேவைகளுடன் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பற்றாக்குறை வாழ்வையும் அரசு, பேரூராட்சி, பணத்தாசை பிசாசுகள் பறிக்க நினைக்கின்றன.

திட்டத்தில் திருட்டா? திருட்டுக்காக திட்டமா?

தமிழக பொதுப்பணித் துறைக்கும், பேரூராட்சிக்கும் கொள்ளையடிக்கும் குதர்க்க புத்தியுடன் புதிய ஞானோதயம் பிறந்துள்ளது. சிட்லப்பாக்கம்-மாடம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவது என்ற தீர்மானத்தை மாடம்பாக்கம் பேரூராட்சி நிறைவேற்றி, தீர்மானத்தை வெளியிடாமல் ரகசியமாக வைத்துக் கொண்டு அமுலாக்க துவங்கி உள்ளனர். மாடம்பாக்கம் ஏரியிலிருந்து தினசரி 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து 7 கி.மீ தொலைவில் உள்ள சிட்லப்பாக்கத்திற்கு 18 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கிவிட்டு, மீதி 2 லட்சம் லிட்டர் தண்ணீரை மாடம்பாக்கத்திற்கு பயன்படுத்துவது என்று திட்டம் வரையறுத்துள்ளனர். திட்டச்செலவு 300 லட்சம் அதாவது 3 கோடி என்று தீர்மானிக்கப்பட்டு செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தை அமுலாக்க எந்தவித சட்டவிதிமுறைகளும் கடைபிடிக்கவில்லை. ஆய்வுபூர்வமான மதிப்பீடுகளும் இல்லை. இத்திட்டத்தின் விபரங்களை ஆய்வு செய்தால், திட்டம் நிறைவேறும், திட்டத்தின் நோக்கம் நிறைவேறாது. திட்டத்தின் பெரும்பகுதி நிதி சூறையாடப்படும். இந்த திட்டத்திற்கு பின்னால், தண்ணீர் வியாபாரம், ஏரி ஆக்கிரமிப்பு, மண் வியாபாரம் என்று மூன்று கொள்ளைகள் நடைபெற துவங்கியுள்ளது.

ஆவணப்பொய்கள் :

மாடம்பாக்கம் ஏரியின் ஆழம் மழைக்காலங்களில் 11.28 மீட்டர் என்று பொதுப்பணித்துறை ஆவணம் கூறுகின்றது. சாதாரணமாக ஏரியை பார்ப்பவர்கள் இது அப்பட்டமான பொய் என்பதை அறிவார்கள். தற்போது ஏரிக்கரையின் உயரம் 2.58 மீட்டர்தான் உள்ளது. ஏரியின் எந்த இடத்திலும் 11.28 அடி ஆழம் இருக்க வாய்ப்பே இல்லை.

இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுத்தவர்கள் பொதுப்பணி மற்றும் மாடம்பாக்கம் பேரூராட்சி நிர்வாகம் ஏரியின் கொள்ளளவு 52.65 MCFT (0.05 TMC) ஆகும். இதில் விவசாயத்திற்கு 28 MCFT (0.03 TMC) தேவைப்படும். மீதமுள்ள 25.79 MCFT (0.03) இத்திட்டத்திற்கு போதுமானது என்று தெரிவிக்கின்றனர். விவசாய நீர் பயன்பாடுபற்றிய இந்த மதிப்பீடு தவறானதாகும். மாடம்பாக்கம், பதுவஞ்சேரி, நூத்தஞ்சேரி பகுதியில் 647 ஏக்கர் நஞ்செய் பயிர்கள் பயிரிடப்படுகிறது. நஞ்செய் நிலத்திற்கு எட்டு ஏக்கருக்கு ஒரு MCFT நீர் தேவைப்படும். இதற்கு மட்டும் 80.88 MCFT நீர் தேவை. இவை தவிர இந்த ஏரியை நம்பி 756 ஏக்கர் புஞ்செய் நிலம் உள்ளது. இவற்றில் சரிபாதி விவசாயம் நடந்தால் கூட 12 ஏக்கருக்கு ஒரு MCFT கணக்கில் 30.50 ஆஊகுகூ தேவைப்படும். ஆனாலும், தற்போது 600 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெறுவதாக அரசு ஆவணங்களே கூறுகிறது. மேற்குறிப்பிட்ட அளவிற்கு ஏரி நீர் கிடைக்காதபொழுது எப்படி 600 ஏக்கர் விவசாயம் செய்ய முடியும்? என்ற கேள்வி எழலாம். இப்பகுதி விவசாயிகள் ஏரியினால் சேமிக்கப்படுகிற நிலத்தடி நீரை பயன்படுத்தி தான் விவசாயம் செய்து வருகின்றனர்.

விவசாயம் என்றால் பயிர்கள் மட்டுமா? தோட்டம், பூங்கா, மேய்ச்சல் புல், உரம், கால்நடை வளர்ப்பு என்பதும் இணைந்ததுதான். இதற்கும் நீராதாரம் தேவைப்படும் என்பதை அரசு இயந்திரம் மறக்கவில்லை, மறைக்கிறது.

அரசு நிர்வாகம் கூறுவதுபோல் நீரின் அளவு 52.65 ஆஊகுகூ இருந்தால் இப்பகுதி மக்களுக்கு ஏன் குறைந்தபட்ச தண்ணீரை வழங்க முடியவில்லை. இந்தியாவில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்ய 100 முதல் 150 லிட்டர் நீர் வழங்கப்பட வேண்டும். மாடம்பாக்கம் பகுதிக்கு தினசரி நபருக்கு 71 லிட்டர் வழங்குவதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவிக்கிறது. இப்பகுதியில் குடியிருப்புகளில் 25 சதமான வீடுகளுக்கு மட்டும்தான் குழாய் இணைப்புகள் உள்ளன. இவற்றில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படுகிறது. மற்றவர்கள் தெரு குழாய்களில் மூன்று நாளைக்கு ஒருமுறை தண்ணீர் பெறுகின்றனர். இப்பகுதி மக்களில் 75 சதவிகிதம் பேர்கள் ஆழ்குழாய் கிணறு (Borewell) அமைத்துதான் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றனர். 30 முதல் 40 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் தற்போது 200 முதல் 250 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. இவை எதை உணர்த்துகிறது. மக்கள் தொகை அதிகரிப்பும், ஏரி நீரின் அளவு குறைந்துள்ளதையும் வெளிப்படுத்தவில்லையா? மக்களை ஏமாற்ற அரசு அடாவடி பொய்களையும் அடக்குமுறைகளையும் கையாள்கிறது.

திட்டத்தில் ஓட்டையில்லை... ஓட்டையில்தான்...!

நீர் இருக்கும் இடத்திலிருந்து நீர் இல்லாத இடத்திற்கு கொடுப்பது அவசியமானது. அடிப்படை உரிமையும் இதுதான். அனைவரும் ஆதரிக்க வேண்டியது. மாடம்பாக்கம் மக்களும், ஏரியும் இதற்கு மாறுபட்டது அல்ல. ஆனால் நீரே இல்லாத ஏரியிலிருந்து சிட்லப்பாக்கத்திற்கும், மாடம்பாக்கத்திற்கும் நீர் வழங்கப்படும் என்று திட்டம் போடுவதுதான் கேள்விக்குறியாக இருக்கும். ஒரு திட்டம் வரையறுக்கும் முன் அதுபற்றிய ஆய்வறிக்கை சமர்ப்பித்திட வேண்டும். அப்படி ஒரு வழிகாட்டு முறை இருப்பதாகவே நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

சிட்லப்பாக்கம் மக்களுக்கு நீர் கொடுப்பதற்கு சிட்லப்பாக்கத்திலேயே ஏரி உள்ளது. 86.86 ஏக்கர் பரப்பளவு உள்ள ஏரி தற்போது 46.88 ஏக்கராக சுருங்கி உள்ளது. இந்த ஏரியை பாதுகாக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து இயக்கம் நடத்தி வருகின்றனர். உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை பாதுகாக்க உத்தரவிட்டுள்ளது. சிட்லப்பாக்கம் ஏரி நீரின் தரம் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாசுப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற காரணங்களை தெரிவிக்கிறார்கள். இரு ஏரி நீர்களின் தரமும் பெரும் வேறுபாடு இல்லாமல் சமமாக இருப்பதாகத்தான் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீரின் தரத்தை அளப்பதற்கு பி.எச் மதிப்பீடு (ph Value) அதாவது நீரில் உள்ள தாதுத் துகள்கள் அளவை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. இதன்படி சிட்லப்பாக்கம் ஏரியில் இந்த பி.எச் அளவு 7.5 ஆகவும், மாடம்பாக்கத்தில் இதன் அளவு 8.0 ஆகவும் உள்ளது. இதேபோன்று சிஎம்டிஏ வெளியிட்ட ஆய்வில் நீரின் கூனுளு தாது படிவங்கள் சிட்லப்பாக்கத்தில் 2.5 முதல் 8.0 , மாடம்பாக்கத்தில் 2 முதல் 6.5 வரை உள்ளது. நீரின் தரத்தின்படி சிட்லப்பாக்கம் ஏரியை பயன்படுத்த வாய்ப்பிருந்தும், அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் அவை புறக்கணிக்கப்படுவது ஏன்?

சிட்லப்பாக்கம் தவிர சேலையூர், செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் ஏரிகள் உள்ளன. இவை மாடம்பாக்கம் ஏரியை விட சிட்லப்பாக்கத்திற்கு மிக அருகாமையிலே உள்ளன. அதாவது 2 முஅ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கிருந்து ஏன் கூடுதல் நீர் எடுத்துச் செல்ல முடியாது.

4 லட்சம் இங்கே! 16 லட்சம் எங்கே?

இத்திட்டத்தின்படி தினசரி 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து, 18 லட்சம் லிட்டர் சிட்லப்பாக்கம் பகுதிக்கும், மாடம்பாக்கத்திற்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என்று தெரிவிக்கிறது. நிலத்தடி நீரை உறிஞ்சினால் தவிர இத்திட்டத்திற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்காது. எப்படி எடுத்தாலும், சிட்லப்பாக்கம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தொட்டி 2 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவாகும். மாடம்பாக்கத்தில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் பூங்காவை அழித்து உருவாக்கப்படும் கீழ்நிலை நீர்த்தொட்டியின் கொள்ளளவு 2 லட்சம் லிட்டர் ஆகும். தினசரி எடுக்கப்படும் நீரில் இந்த 4 லட்சம் லிட்டர் போக மீதமுள்ள 16 லட்சம் லிட்டர் என்னவாகும்? இதற்கான விடை திட்டத்தில் இல்லை. இது சுழற்சி முறையில் வழங்கப்படுவதில் சரிகட்டப்படும் என்றாலும் அதை கண்காணிப்பதற்கு போதிய நிர்வாக ஏற்பாடு இல்லை. ஆனால் திட்டத்தின் எழுதப்படாத நோக்கத்தில் தெளிவாக உள்ளது. அதாவது மாடம்பாக்கம் விவசாயத்தை அழித்து, நிலத்தடி நீரை உறிஞ்சி, இரு பேரூராட்சிகளுக்கும் கொடுக்கிறேன் என்ற பெயரால்தண்ணீர் வணிகம், கொள்ளைஅமோகமாக நடைபெற உள்ளது. இத்துடன் மாடம்பாக்கத்தை விட 15 சதவிகித மக்கள் தொகை அதிகமாக உள்ள சிட்லப்பாக்கத்திற்கு 18 லட்சம் லிட்டர் தண்ணீர் எப்படி பயன்படுத்தப்படும் என்ற கேள்வியும் இந்ததண்ணீர் கொள்ளையைஉறுதிப்படுத்துகிறது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி சிட்லப்பாக்கத்தில் 31,987 பேர்கள் வசிக்கின்றனர். தற்போது இது கூடுதலாக இருக்கும். பழைய கணக்குப்படியே அளவீடு செய்தாலும் 18 லட்சம் லிட்டரும் முழுமையா வினியோகித்தால் ஒரு நபருக்கு 47 லிட்டர் தான் கிடைக்கும். மாடம்பாக்கத்தில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி 31,681 பேர்கள் வசிக்கின்றனர். ஏற்கனவே வினியோகிக்கப்படுகிற குடிநீர் அல்லாமல் இந்த இரண்டு இலட்சத்தை கணக்கிட்டால் நபர் ஒருவருக்கு 6.3 லிட்டர் மட்டுமே கிடைக்கும். இவையெல்லாம் நடந்தால் நல்லது. ஆனால் மாடம்பாக்கம் ஏரியில் நீரில்லாதபொழுது ஒரே ஆண்டில் நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றிய பிறகு திட்டம் செயல்பட முடியாது. இவையெல்லாம் திட்டம் போடுபவர்களுக்கு தெரியாமலா இருக்கும்? திட்டத்தின் நோக்கம் வேறு என்பதால் இதற்கான விளக்கத்தை தெரிவிக்க முடியவில்லை.

விதி மீறலே விதியாகியது :

பொது நீர்நிலையோ, தனியார் நீர்நிலையோ தண்ணீரை சேமிக்கவும், நிலத்தடி நீரை உயர்த்தவும் பயன்படுத்த வேண்டும்என்ற 2008ம் ஆண்டு நீர்நிலை பாதுகாப்பு சட்டத்தை மாடம்பாக்கம் பேரூராட்சி அப்பட்டமாக மீறியுள்ளது.

இந்த திட்டத்திற்கு, ஏரியின் ஆழம் குறைவாக இருப்பதால் கிணறுகளை வெட்டித்தான் நீர் எடுக்க வேண்டுமென்று பொதுப்பணித்துறை அனுமதி அளித்துள்ளது. கிணறு வெட்டுவதற்கான விதியின்படி ஏரியின் நீர்ப்பிடிப்பிற்கு வெளியே 25 மீட்டர் தூரத்தில்தான் கிணறுகள் வெட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதை செய்யாமல் ஏரிக்குள் கிணறு வெட்டினால், சென்னை பெருநகர நிலத்தடி நீர் (ஒழுங்குமுறை) சட்டம் 1987, பிரிவு 14(2) () சட்டத்தை மீறியதாகும்.

திட்டத்தின் எழுதப்படாத நோக்கம்கொள்ளைஎன்று இருப்பதால், விதிமுறைகளை விதவிதமாக மீறும் செயல் நடக்கிறது. அதாவது 100 அடி சுற்றளவில் 56 அடி ஆழத்திற்கு 5 கிணறுகளை மேற்கண்ட விதிகளின்படி வெட்டுவதற்கு அனுமதி அளித்தனர். ஏரியின் தற்போதைய பரப்பளவு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆவணப்படி 247 ஏக்கர் ஆகும். இந்த ஏரி தற்போது முக்கோண வடிவத்தில் உள்ளது. இந்த ஏரியை 80 ஏக்கர் என்று சுருக்கி செவ்வக வடிவத்தில் புதிதாக வரைபடத்தை உருவாக்கி, அதன் எல்லையிலிருந்து 25 மீட்டர் தூரத்தில் கிணறு எடுப்பதாக ஆவணங்களை உருவாக்கி உள்ளனர். சட்டத்தை மதித்து அமுல்படுத்துகிறோம் என்பதற்காக 167 ஏக்கர் ஏரியின் நிலத்தை முழுங்கிவிட்டார்கள். தண்ணீர் கொள்ளைக்கு அடுத்து இங்கு ஏரியை விலைபேசும் பெரும் ஆபத்து உருவாகிவிட்டது.

மாடம்பாக்கம் மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 6.03.2002ம் ஆண்டு அனுமதி கொடுத்து 10,600 சதுர அடியில் பூங்கா உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வந்தது. குழந்தைகள் விளையாட்டு, முதியவர்களின் சந்திப்பு, நடைபயிற்சி என அனைத்தும் இயங்கிய ஒரு பூங்காவை, எந்த அனுமதியும் பெறாமல் இரவோடு இரவாக அடித்து கீழ்நிலை தண்ணீர் தொட்டி கட்டி வருகின்றனர். இதுபோன்ற அத்துமீறல்கள், சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் இல்லை, தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற கொள்ளைக்கார ஆட்சியை வெளிப்படுத்துகின்றனர்.

திட்டம் 3 கோடி கொள்ளை 40 கோடி :

இதே காலத்தில் ஏரியில் 7.78 ஏக்கர் அதாவது 31,500 சதுர அடி ஆக்கிரமிப்பு உள்ளதாகவும், அதை அகற்றுவதற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று வந்தனர். ஆட்சியர் ஆக்கிரமிப்பு மற்றும் தடைகளை அகற்ற அனுமதி அளித்தார். அந்த அனுமதியில் ஆக்கிரமிப்பு உள்ள பகுதியின் மண் முழுவதுமாக அகற்றி ஆழப்படுத்த வேண்டும், அவ்வாறு அகற்றும் மூலம் கிடைக்கப்பெறும் மண்ணில் ஏரிக்கரை பலப்படுத்தப்பட்டது போக, மீதமுள்ள மணல் சுமார் 4725 லாரி லோடுகள் (2 யூனிட்) வரி செலுத்தி சந்தையில் விற்கலாம் என அனுமதி அளித்தது.

ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தடைகளை நீக்குதல், கரைகளை பலப்படுத்தல் வரவேற்கக் கூடியது. வழக்கமாக ஆமை வேகத்தில் நகரும் அரசுப்பணிகள், மாடம்பாக்கம் ஏரியில் மண் எடுத்தல் அசுர வேகத்தில் நடைபெறுகிறது. இதுவரை ஏரிக்கரையில் எந்த மண்ணும் கொட்டப்படவில்லை. ஏரியின் எல்லா இடத்திலும் உள்ள மண் வெட்டப்படுகிறது. 3 அடி ஆழத்திற்கு மட்டும் எடுக்க அனுமதி பெற்று 10 முல் 12 அடிகள் ஆழம் வரை பொக்லைன் வைத்து வெட்டப்படுகிறது. நிலத்தடி நீரை பாதுகாக்கும் மண்ணை எல்லாம் அள்ளிவிட்டு பாறைகளாக மாற்றி வருகின்றன. மொத்தத்தில் ஏரி ஓநாய்களின் குதரலுக்கு ஆளாகி உள்ளது.

5000 லாரிகள் மட்டும் மண் விற்கலாம் என்ற நிலை கடந்து, இதுவரை 10,000க்கும் மேற்பட்ட லாரி மண்கள் வெளியே சென்றுள்ளன. ஒரு லாரி மண் விலை ரூ.10,000 வரை விற்கப்படுகிறது. அரசு அனுமதித்த 5000 லாரிக்கு 5 கோடிகள் போக இதுவரை மேலும் 5 கோடிக்கான மண் சூறையாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து இன்னும் பல ஆயிரம் லாரிகள் மண் வெளியேற்றப்பட்டு விற்பனைக்கு செல்கிறது. தற்போதைய அசுர வேக மண் எடுத்தல் சுமார் 40 கோடி முதல் 50 கோடிகள் வரை கொள்ளையடிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஒரே கல்லில் மூன்று மாங்காய் :

ஒரு திட்டத்தில் குறைந்தபட்ச பலன் கூட கிடைக்காமல், அறிவிக்கப்பட்ட நோக்கம் நிறைவேறாமல், சிட்லப்பாக்கம் மக்களையும் ஏமாற்றி, மாடம்பாக்கம் மக்களையும் ஏமாற்றும் நிலை உள்ளது. ஒரு திட்டத்தை முன்வைத்து சாலைகள், பூங்கா, ஏரி, விவசாயம், குடிநீர் என அனைத்தையும் அழித்து வாரிச்சுருட்டும் வகையறாக்களாக உள்ளனர். இத்திட்டத்தின் பிரதானமாக மூன்று கொள்ளைகள் நடக்கிறது.

1) ஏரியிலிருந்து உறிஞ்சப்படும் தண்ணீரில் 16 லட்சம் லிட்டர் நீர் விற்கப்படுவதை தவிர, வேறு எதற்கும் பயன்படுத்த மாட்டார்கள்.

2) ஏரியின் பரப்பளவை 247 ஏக்கரிலிருந்து 80 ஏக்கராக குறைத்து மீதமுள்ள 167 ஏக்கரை பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மூலமாக ஆக்கிரமிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்காக திட்டமிட்டுள்ளன.

3) ஆக்கிரமிப்பை அகற்றுதல், தடைகளை நீக்கல் என்ற பெயரில் ஏரியின் நீர்ப்பிடிப்பை அழித்து, சுமார் 40 கோடி வரை கொள்ளையடிக்கும் செயல் நடந்து வருகிறது.

முதல் இரண்டும் நடைபெற உள்ளது. மூன்றாவது நடந்து கொண்டு இருக்கிறது. இவை தவிர திட்டத்தில் இருந்து பல லட்சம் சுருட்டும் பணிகளும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, சிட்லப்பாக்கம்-மாடம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டம் பெரும் கொள்ளைக்காகவே உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

மாடம்பாக்கத்தை மரணப்பாக்கமாக மாற்றாமல் இருக்க அங்குள்ள குடிமைச் சமுதாயம், குறிப்பாக இளைஞர்கள் சட்ட ரீதியாகவும், களத்தில் நின்றும் போராடி வருகின்றனர். நீர்நிலைகளையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது இன்றைய தேவை. குடிமைச் சமுதாயம் கருத்து ரீதியான, சட்டப்படியான போராட்டம் நடத்துகிறபோது, அரசு அடக்குமுறை கருவி கொண்டு அடக்குகிறது. குதறும் ஓநாய்களை கண்டு, கதராமல், குடிமைச் சமுதாயம் கரம் கோர்ப்போம்.

இம்மக்களின் குரலாக இருப்பது :-

1) மாடம்பாக்கம் ஏரி மட்டுமல்ல, சிட்லப்பாக்கம், செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம், சேலையூர் ஆகிய ஏரிகளையும் சுத்தப்படுத்தி, பாதுகாத்து இப்பகுதி மக்கள் அனைவருக்கும் போதுமான அளவு நீர் வழங்க வேண்டும்.
2) இப்பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளையும் இணைக்கக் கூடிய முறையில் வரத்துக்கால்வாய்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
3) மாடம்பாக்கம் ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் மண் எடுத்து ஏரியை அழிக்கும் செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
4) ஏரியின் பரப்பளவை குறைத்து 80 ஏக்கராக சுருக்கி மீதமுள்ள 167 ஏக்கரை கபளீகரன் செய்ய இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
5) மக்கள் பயன்பாட்டிற்காக இருந்த பூங்காவை மீட்டெடுத்து கொடுக்க வேண்டும்.
- .பாக்கியம்





சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...