Pages

செவ்வாய், அக்டோபர் 18, 2016

எமப்பட்டினமாக மாறும் சென்னைப் பட்டணம்


.பாக்கியம்

 "உலகில் உள்ள 47 முக்கிய நகரங்களில் 
டைபெறும் சாலவிபத்துக்களில் 
மரணமடைபவர்களின் எண்ணிக்கையில் 
சென்னை பெருநகரம்தான் முதலிடம் வகிக்கிறது
 ((Global Report of Urban Health - UN)

       "சிங்கார" சென்னை, "சீர்மிகு" சென்னை என்ற அடைமொழியுடன் தற்போது"எமலோக" சென்னை என்ற அடைமொழியும் சேர்ந்துவிட்டது.

முதல்தலைமுறை பட்டதாரிகள்
சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் திருவொற்றியூரைச் சேர்ந்த சித்ரா, புளியந்தோப்பைச் சேர்ந்த ஆஷாஸ்ருதி, போரூரைச் சேர்ந்த காயத்ரி. மூன்று பேருமே குடும்பத்தின் முதல்தலைமுறை பட்டதாரிகள். வழக்கம் போல் அக்டோபர் 13-ஆம் தேதி மூன்று பேரையும் பெற்றோர் கல்லூரிக்கு வழியனுப்பி வைத்தனர்.அது கடைசி வழி அனுப்பல் என்று யாருக்கும் தெரியாது. அன்று பிற்பகல் கல்லூரி முன்பாக நடந்த விபத்தில் - தண்ணீர் லாரி மோதி சித்ரா, ஆஷாஸ்ருதி, காயத்ரி ஆகிய மூன்று மாணவிகளும் உடல் நசுங்கி கொடூரமாக இறந்தார்கள். கண் எதிரே நடந்த இந்தக் கொடூரத்தைக் கண்டபல மாணவிகள் கதறினார்கள். சிலர் மயக்கம் போட்டு விழுந்தார்கள். கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் என்று ஒட்டுமொத்த கல்லூரியேசாலையில் அமர்ந்து இந்தக் கொடூரத்தைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டது.

வழக்கம்போல் அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டனர். இராயப்பேட்டை மருத்துவமனைக்கு மூன்று மாணவிகளின் உடல்களும் எடுத்துச் செல்லப்பட்டன. மருத்துவமனை எங்கும் சக தோழிகள், மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் அழுகை ஓலம். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது?இறந்த மூன்று மாணவிகளும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். "என் குடும்பத்திலேயே என் பொண்ணு தான் முதல் பட்டதாரி. படிச்சு முடிச்சு அவ தான் குடும்பத்த காப்பாத்த போறா" மூன்று மாணவிகளின் பெற்றோரும் இப்படித்தான் பேசிக்கொண்டிருந்தனர். கனவுகண்டு கொண்டிருந்தனர். இப்போது அவர்களது பேச்சு நின்றுவிட்டது. கனவு பகல் கனவாகிவிட்டது. அந்தக் குடும்பங்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு. செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் பலியான விபத்தை தொடர்ந்தும் அடுத்தடுத்து விபத்துகள் நடந்து வருகின்றன.

விபத்தல்ல...படுகொலை...

பல சுயநிதி கல்லூரிகளுக்கும், தனியார்கல்லூரிகளுக்கும் அரசும், அதிகாரிகளும் பேருந்து நிறுத்தங்கள், சாலைகள், பாதைகளை கடக்க வசதிகள் என ஓடி, ஓடி சிறப்புச் சலுகைகளை செய்வார்கள். சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கும் செல்லம்மாள் மகளிர் கல்லூரியை கண்டுகொள்ளாமல் மூன்று மாணவிகளைப் படுகொலை செய்துவிட்டனர். வழக்கம்போல் அரசு நிர்வாகம் "கட்டுப்பாட்டை இழந்த லாரியால் விபத்து", "லாரி டிரைவர் கைது" என்று பத்திரிகைகளுக்கு சம்பிரதாய சடங்கு அறிக்கையைக் கொடுத்து ஒதுங்கிக் கொண்டது. அரசு நிர்வாகத்திற்கும் இதுபோன்ற விபத்துக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பொறுப்பைத் தட்டிக் கழிப்பது விபத்தை விடக் கொடூரமானது.

சம்பவத்தன்று மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், "இங்கே மாணவிகள் பாதையைக் கடக்க வசதியில்லை, அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்வதில்லை. இதைப் பலமுறை வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை" என்று குமுறியதை மிகப்பெரும் குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.மாணவிகள் தூரத்தில் இருந்து இறங்கி நடந்து வருவதைக் குறைப்பதற்காகவே அனைத்துப் பேருந்துகளும் இந்த இடத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனாலும் அயர்ந்து உறங்கும் அதிகாரிகளிடம் இந்தக் கோரிக்கைகள் எடுபடவில்லை. இதன் விளைவு இன்று மூன்று குடும்பங்கள் நடுத்தெருவில்.

அரசு தப்பிக்க முடியாது

இந்தக் கல்லூரி உள்ள இடம் மிக அகலமான சாலை. கிண்டியிலிருந்து வருகிற வாகனங்கள் குறுகலான மேம்பாலத்தில் குவிந்துகீழே இறங்குகிற பொழுது சாலை அகலமாகஇருப்பதால் சின்னமலை வரை வேகமெடுத்துச் செல்வார்கள். இதனால் இங்கு விபத்துஏற்படும் நிலைமை உள்ளது. "வாகனம் செல்வதற்கு டிராக் கோடு இல்லை. வேகத்தடை இல்லை. கல்லூரி வளாகம் என்ற அறிவிப்புஇல்லை. அகன்ற சாலையை மாணவிகள் கடந்து செல்ல வழி இல்லை. பேருந்துகள் பொதுவாக நிற்பதில்லை. நிற்கிற பேருந்துகளுக்கும் பேருந்து நிறுத்தம் அருகில் எல்லைக்கோடு அமைக்கவில்லை. இடவசதி ஏராளமாக இருந்தபொழுதும் அரசு நிர்வாகம் வழக்கம் போல் உறங்கிக் கொண்டிருந்தது. சில இடங்களில் இடவசதி இல்லை என்று காரணம் சொல்லிப் புறக்கணிப்பார்கள். ஆனால் இங்கு அந்தப் பிரச்சனை இல்லை. வெள்ளம் கரை புரண்டு ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கும் என்பதைப் போல் அரசு நிர்வாகம் செயல்படுகிறது".

அரசு நிர்வாகம் இதை விபத்து என்று கூறி லாரியின் மீது பழிபோட்டு தப்பிக்க முடியாது என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது. "அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாகத்தான் அப்பாவி பொதுமக்கள் சாலைகளில் ஆபத்துகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பே அரசின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். தடுக்கப்பட வேண்டிய விபத்துகளிலிருந்து, மக்களைக் காப்பாற்றும் கடமையிலிருந்து மாநில அரசு தப்பிக்க முடியாது" என்று அதில் குறிப்பிட்டுள்ளது. சென்னை குடிநீர் வடிகால் வாரியத்திற்குச் சொந்தமான லாரிகள் இல்லை. 504 லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்திக் கொண்டு குடிநீர் வழங்குகிறார்கள். இதன் மூலம் 4ஆயிரம் நடைகள் லாரிகள் ஓடுகிறது. இந்தக்கணக்கே வாரியம் தெரிவித்துள்ள பொதுப்படையான கணக்குதான்.

சென்னை நகரில் 2 ஆயிரத்து 400 தனியார் குடிநீர் லாரிகளும் ஓடுகிறது. இவற்றையும் சேர்த்தால் குறைந்த பட்சம் 15 ஆயிரம் நடைகளுக்கு மேல் குடிநீர் லாரிகள் சென்று வருகிறது. அதுவும் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இந்த லாரிகள் இயக்கப்படுகிறது. ஒப்பந்த அடிப்படையில் லாரிகள் இயக்கப்படுவதாலும் அதிகாரத்திலிருக்கும் செல்வாக்கு படைத்தவர்கள் இந்த லாரியின் சொந்தக்காரர்களாக இருப்பதாலும் இதன் பாதுகாப்புதன்மை ஓட்டுநரின் திறமை ஆகியவை அனைத்தும் உரிய முறையில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. சென்னை நகரின் குடிநீர்த் தேவையை உரிய முறையில் குழாய்கள் மூலம்வழங்குவதை 100 சதவீதம் உறுதிப்படுத்தாமல் இருப்பதற்குக் காரணம் லாரிகள் மூலம் கிடைக்கும் வருமானம் அடிப்படையானது. எனவே கணக்கிலடங்கா லாரிகளின் ஓட்டத்தாலும், "யார் செத்தா எனக்கென்ன?" என்று கவலையில்லாமல் பணம் பண்ணும் அதிகாரிகளாலும் மக்கள் உயிர் கிள்ளுக்கீரையாக மாற்றப்படுகிறது.

தமிழகம் இரண்டாமிடம்-சென்னை முதலிடம்

2015- ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் தமிழகம் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மத்தியசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இந்த விபரத்தை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2014-ஆம் ஆண்டு 15 ஆயிரத்து 176 பேர் சாலை விபத்தில்மரணமடைந்துள்ளனர். 2015-ஆம் ஆண்டுநடைபெற்ற 69 ஆயிரத்து 59 சாலை விபத்துகளில் 15 ஆயிரத்து 642 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் நடைபெற்றுள்ள ஒட்டுமொத்த சாலை விபத்துக்களில் தமிழகம் 14 சதவீதம் என்ற பெரும் பங்கை வகிக்கிறது. மாதம்தோறும் 1,300 பேர் தமிழகத்தில் சாலைவிபத்துக்களில் மரணமடைந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், விபத்துக்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2015-ஆம் ஆண்டு மட்டும் 34 ஆயிரம் பேர் தமிழகத்தில் சாலை விபத்துக்களால் படுகாயம் அடைந்துள்ளனர்.

உலகிலுள்ள 47 நகரங்களில் ஆய்வு நடத்தியதில் சென்னை நகரத்தில்தான் ஒரு லட்சம் பேருக்கு 26.6 பேர் சாலை விபத்தில்மரணமடைகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நகர்ப்புற சுகாதாரத்திற்கான சர்வதேச அறிக்கை இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது. சென்னைக்கு அடுத்த இடத்தை பிரேசில் நாட்டைச் சேர்ந்த போர்ட்லேசா என்றநகரம் பிடித்துள்ளது. இந்திய நகரங்களில் கொல்கத்தா, தில்லி, பெங்களூரு ஆகியவை 23, 24, 25-ஆவது இடங்களில் தான் உள்ளன. சுவீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் நகரில் தான்மிகமிகக் குறைவாக ஒரு லட்சம் பேருக்கு 0.7 பேர்என்ற விகிதத்தில் விபத்து நடைபெறுகிறது. அதைக்கூட இந்த ஆண்டு 0 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் எந்த முடிவும் எடுக்காமல் எமலோகத்துக்கு இலவச டிக்கெட் கொடுத்து அனுப்புவதையே அரசு நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறது. 2013-ஆம் ஆண்டு சென்னையில்மட்டும்ஆயிரத்து 705 சாலை விபத்துக்கள்நடைபெற்றுள்ளன. இதில் 1,247 பேர் மரணமடைந்துள்ளனர். இந்திய நகரங்களிலேயே அதிக அளவு ஆயிரத்து 700 பேர் சென்னைநகரில் சாலை விபத்துக்களால் காயமடைந்துள்ளனர். விபத்துக்களுக்கு அரசுநிர்வாகம் நேரடிப் பொறுப்பாக இருக்கிறதுஎன்பதைப் பல விபரங்கள் அம்பலப்படுத்துகின்றன. ஆனால் அரசு நிர்வாகம் மூடி மறைக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபடுகிறது.

காரணம் தேடும் நிர்வாகம்

சென்னை பெருநகர போக்குவரத்துத் துறை, காவல்துறை மற்றும் அரசு நிர்வாகம் அனைத்துமே விபத்துக்கான காரணமாக ஓட்டுநரை மட்டுமே குற்றம் சாட்டுகின்றன. அநேகமாக அரசு நிர்வாகத்தின் ஆய்வுகளும் முடிவுகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு எழுதப்பட்டதாகவே உள்ளது. சாலை விபத்துக்களைக் குறைக்க முடியாமல் இருப்பதற்கும் தொடர்ந்து அதிகமாகிக் கொண்டிருப்பதற்கும் அதிகாரிகள், "வாகனங்கள் அதிகரிப்பு, புதிய ரக ரகமான வாகனங்கள், அதிக சக்தி வாய்ந்த வாகனங்கள் ஆகியவை விபத்துக்குக் காரணம்" என்று கூறுகிறார்கள். இது வெற்றுக்காரணமென்று ஊரே அறியும். வட்டாரப் போக்குவரத்து ஆணையர் (ஆர்டிஓ) இதையெல்லாம் கவனிக்காமல் என்ன செய்கிறார்?

இந்தியாவில் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துக்களில் உரிமம் இல்லாமல் விபத்து ஏற்படுத்தி மரணமடைந்தவர்கள் 39 ஆயிரத்து 314 பேர். தற்காலிக உரிமம் பெற்று வாகனம் ஓட்டியதால் மரணமடைந்தவர்கள் 50 ஆயிரத்து 815 பேர். இதற்கெல்லாம் போக்குவரத்து ஆணையம் பொறுப்பில்லையா? இதற்கு எந்த ஓட்டுநர் பொறுப்பு ? வேகமாகச் செல்வது, குடித்துவிட்டுச் செல்வது, ஹெல்மட் அணியாமல் செல்வது, சீட்பெல்ட் அணியாமல் செல்வது, சாலையின் குறுக்கே வருவது போன்றவைகள் விபத்துக்கான காரணம் என்று கூறுகின்றனர்

போக்குவரத்துத் துறையும், காவல்துறையும் புள்ளி விபரத் துறையாக மாறிவிட்டன. ஏன் நடக்கிறது? என்ற காரணத்தை அடுக்குவது இந்தத் துறைகளின் பணி அல்ல. மாறாக மேற்கண்ட தவறிழைப்பவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டியது இந்த இரு துறைகளின் முக்கியக் கடமை. தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக "கையை நீட்டுவதும்", விதிகளை முழுமையாக அமல்படுத்தாததும்தான் விபத்துக்குக்காரணமென்று கூற வேண்டும். எனவே இந்தத் துறைகள்தான் பல குடும்பங்களின் இழப்பிற்குக் காரணமாக உள்ளன.

பாதசாரிகளே முதல் பலி

சாலை விபத்துக்களில் அதிகமாக மரணமடைவோர் பாதசாரிகளே. பாதையில் நடப்போர், சாலையைக் கடக்க முயல்வோர், சைக்கிளில் செல்வோர் ஆகியோர் தான்அதிகம் பலியாகின்றனர். உலக அளவில்பாதசாரிகள் சாலை விபத்தில் மரணமடைவது 26 சதவீதம். இந்தியாவில் நடைபெறக் கூடியசாலை விபத்துக்களில் 44 சதவீதம் பாதசாரிகள் மரணமடைகின்றனர். சென்னையில் இதே அளவு தான் என்று யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதேபோன்று மரணமடையக் கூடிய வயதைப் பொறுத்தவரை கல்லூரி மாணவ-மாணவிகள், பணிக்குச்செல்லக் கூடியவர்கள், அதிகமாக மரணமடைகின்றனர். அதாவது 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 54 சதவீதம் பேர் இந்தியாவில் சாலை விபத்தில் மரணமடைகின்றனர். சென்னையில் பாதசாரிகளின் மரணம் மாவட்ட நிர்வாகத்தின் அசட்டையால் இந்த அளவு நடைபெறுகிறது.

சென்னை நகரில் அனைத்து வாகனங்களும் செல்வதற்கு சாலைகள் இருந்தாலும் பாதசாரிகள் நடப்பதற்கு நடைபாதைகள் இல்லை. சென்னை நகரத்தில் உள்ள 90 சதவீதமான சாலைகளில் நடைபாதைகள் பயன்படுத்தக்கூடிய முறையில் இல்லை. பல இடங்களில் மாநகராட்சி மற்றும் சாலைப் போக்குவரத்து நிர்வாகம் நடைபாதையையும் சேர்த்தே சாலை அமைத்துவிடுகிறது. சென்னையின் பெரும்பாலான சாலைகளில் மின்மாற்றிகள், பயன்படாத மழைநீர் கால்வாய்,கடைகள், கார்கள், நடைபாதைக் கோவில்கள் என நடைபாதைகள் பாதசாரிகள் பயன்படுத்தமுடியாத அளவிற்கு இருக்கிறது. தற்போது சென்னையில் பச்சை நிற குப்பைத் தொட்டிகள்நடைபாதைக்கு அருகில் சாலையிலேயே இருக்கிறது. சக்கரம் வைத்த குப்பைத் தொட்டி என்பதால் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தள்ளி வைத்துவிடலாம் என்பதற்காக பெரும்பாலான இடங்களில் தார் சாலைகளிலேயே இந்த குப்பைத் தொட்டிகள் கிடக்கிறது. குப்பைகளோ சாலைகளில் கிடக்கிறது

இதனால் தான் பாதசாரிகள் 44 சதவீதம் பேர் இங்குப் பலியாக வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பட்டியலிலே தான் செல்லம்மாள் கல்லூரியின் மாணவிகளும் சேர்கிறார்கள். வசதியானவர்கள் குடியிருக்கக்கூடிய பங்களா டைப் தெருக்களில் சென்னை மாநகராட்சி நடைபாதை அமைத்துள்ளது. அங்கு அவர்கள்சாலையில் நடப்பது மிகமிகக் குறைவு. மக்கள் நடக்க வேண்டிய இடத்தில் மாநகராட்சியும், மாநகராட்சி உதவியோடு மற்ற பல ஆக்கிரமிப்புகளும் உள்ளன. இதற்கெல்லாம் யார்பொறுப்பு? வாகன ஓட்டிகளும், பாதசாரிகளுமா? இல்லை. முடிவெடுத்து அமல்படுத்தாத அரசு நிர்வாகம்தான்.

பிறர் சாக, தான் வாழும் கொள்கை

உலகம் முழுவதும் பல நாடுகளில் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கு சிறந்தவழிமுறைகளைக் கையாண்டு அமலாக்கியுள்ளனர். சென்னையில் சாலை விபத்து நடைபெறுவதற்கு அறிவிப்பு பலகை, ட்ராக் அமைப்பு, நடைபாதை அமைப்பு, வேகத்தடை போன்ற ஏராளமான குறைபாடுகளுடன் கூடிய சாலை அமைப்பு தான் (கயரடவல சடியன னநளபைn)சாலை விபத்திற்கு மிக முக்கியமான காரணம்என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதேபோன்று சாலைப் பாதுகாப்பும் அவசரஉதவிக்கான ஏற்பாடுகளும் இல்லாதது அதிக உயிரிழப்பிற்குக் காரணமாகும். மிக மிக முக்கியமான காரணம் பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்தி முறைப்படுத்தாமல் தனியார் போக்குவரத்தையும், தனிநபர் போக்குவரத்தையும் ஊக்கப்படுத்துவதால் அதிக சாலை விபத்துக்கள் நடக்கிறது என்றுஆணித்தரமாகக் கூறுகின்றனர்.

நகரின்பொருளாதார நடவடிக்கைகள் அதிகமாகிறபொழுது அதற்கேற்ற வகையில் சாலை அமைப்பும், பாதுகாப்பு அமைப்பும் இருக்க வேண்டும். அதற்காகத் தமிழக அரசும், சென்னை நிர்வாகமும் துளி அளவும் முயற்சி எடுக்காமல் இருப்பதுதான் விபத்துக்களின் எண்ணிக்கை கூடுவதற்கு முக்கியக்காரணம். பிறர் சாக, தான் வாழ வேண்டுமென்ற கொள்கையோடு செயல்படும் சென்னை பெருநகர நிர்வாகத்தின் இந்தச் செயல்பாட்டை மாற்ற வேண்டும். மரணங்களுக்கு காரணங்களைக் கண்டுபிடித்து ஓட்டுநர் மீதும், வாகனத்தின் மீதும், இறந்தவர்கள் மீதும், காயமடைந்தவர்கள் மீதும் பழி சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ளும் போக்கைத் தொடர்ந்து அனுமதிக்கக் கூடாது. எனவே சென்னை பெருநகர நிர்வாகத்தின் இந்த மரணக் கொள்கைக்கு முடிவுகட்ட வேண்டும்.
கட்டுரையாளர்;
சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்

தீக்கதிர்-17.10.2016

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...